உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு.. இலவச சிகிச்சை!தனியார் மருத்துவமனைகளுக்கும் கோர்ட் உத்தரவு

பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு.. இலவச சிகிச்சை!தனியார் மருத்துவமனைகளுக்கும் கோர்ட் உத்தரவு

' புதுடில்லி, : பாலியல் வன்முறை, ஆசிட் வீச்சு, போக்சோ சட்ட குற்றங்களில் பாதிக்கப்பட்டோருக்கு, நாடு முழுதும் உள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை இலவசமாக வழங்க வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரதிபா சிங், அமித் சர்மா அடங்கிய அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:பாலியல் வன்முறை, ஆசிட் வீச்சு, போக்சோ சட்ட குற்றங்கள் தற்போது அதிகரித்துள்ள நிலையில், இவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்படுவோருக்கு உரிய சிகிச்சை கிடைக்காதது தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன.

பரிசோதனை

பாலியல் வன்முறை, ஆசிட் வீச்சு, போக்சோ சட்ட குற்றங்களில் பாதிக்கப்பட்டோருக்கு, எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும். இது, நாடு முழுதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு உதவி பெறும் மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள், பரிசோதனை மையங்களுக்கும் பொருந்தும்.சிகிச்சை என்பது, முதலுதவி, டாக்டர்களின் பரிசோதனைகள், மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவது, சிகிச்சைக்குப் பிந்தைய தொடர் சோதனைகள், அறுவை சிகிச்சைகள், மருத்துவ பரிசோதனைகள் என, அனைத்தும் இலவசமாக வழங்க வேண்டும். மருந்துகள், மாத்திரைகளும் இலவசமாக வழங்க வேண்டும். இதைத் தவிர, பாதிக்கப்பட்டோருக்கு தேவையான மனநல ஆலோசனைகள், பயிற்சிகள், அவர்களுடைய குடும்பத்தாருக்கு ஆலோசனைகளும் இலவசமாக வழங்க வேண்டும்.இதுபோன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டோருக்கு சில நேரங்களில் நீண்ட காலத்துக்கு தொடர் சிகிச்சை தேவைப்படலாம். அதுவும் இலவசமாக வழங்க வேண்டும்.

அடையாள அட்டை

தங்களுடைய மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் இது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை தெரிவிக்க வேண்டும்.இதுபோன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைக்கு வரும்போது, இலவசமாக சிகிச்சை வழங்கப்படுவது குறித்து அவர்களுடைய குடும்பத்தாரிடம் தெரிவிக்க வேண்டும். மேலும், எந்த ஒரு அடையாள அட்டையும் கேட்காமல், உடனடியாக சிகிச்சையை துவக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஓராண்டு சிறை தண்டனை

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: எந்த ஒரு மருத்துவமனையும், சிகிச்சை அளிக்க மறுக்கக் கூடாது. அவ்வாறு சிகிச்சை அளிக்க மறுத்தால், ஓராண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். சிகிச்சை அளிக்க மறுக்கப்படுவது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கலாம்.ஏற்கனவே உள்ள சட்டங்கள் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அறிவிப்புகள், இலவசமாக சிகிச்சை அளிப்பதை உறுதி செய்கின்றன. ஆனாலும், அந்த உத்தரவுகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை.இதனால், அனைத்து மருத்துவமனைகளிலும், இதுபோன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டோருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்ற வாசகங்கள், பெரிய அளவில் விளம்பர பலகைகளாக வைக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி