இப்போதெல்லாம் 50 வயதை தாண்டினாலே, உடல் ஆரோக்கியம் குறைந்து, பலரும் துவண்டு விடுகின்றனர். ஆனால், பிரதமர் மோடி, 75 வயதிலும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படுவது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். இதற்கு அவரின் யோகா உள்ளிட்ட வழக்கமும், அன்றாட உணவு பழக்கங்களுமே காரணம். வேப்பம் பூ, இலையில் இருந்து முருங்கைக்காய் வரை ஆரோக்கியமாக சாப்பிட்டு தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துள்ளார்.'ஆரோக்கியமானதை சாப்பிடுங்கள், நலமாக வாழுங்கள்' என்ற கூற்றை நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெறலாம் என்பதை பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை முறை தெளிவுபடுத்துகிறது. இதுப்பற்றி அவர் பகிர்ந்துள்ள 5 முக்கிய உணவு பழக்கங்களையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் இங்கே காணலாம்.வேப்பம் பூ மற்றும் கற்கண்டு
கோடை காலத்திற்கு முன்னதாக வரும் சைத்ர நவராத்திரி (வசந்த நவராத்திரி) காலத்தில், 'வேப்பம் பூ, வேப்பம் இலை மற்றும் கற்கண்டு ஜூஸ் சாப்பிடும் பழக்கம் எனக்கும் இருக்கிறது' என ஒருமுறை பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பொதுவாக வேப்பம் பூ, இலைகள், கோடை காலத்திற்கு முன்பு நம் உடலை சமநிலைப்படுத்தும் தன்மைக்கொண்டவை. அதனால் தான், தென்னிந்தியாவில் இன்றும் வீடுகளில் வேப்பிலை வைக்கும் பழக்கம் இருக்கிறது. மேலும், வேப்பம் பூ, பித்த தணிப்பாற்றலை கொண்டது. உடலில் ஆக்ஸிஜனேற்றம், நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது.வேப்பம் இலைகளும், வைரசை எதிர்க்கும் திறனைக் கொண்டது. பருவ கால மாற்றத்தின்போது செரிமான அமைப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன. மேலும், குடலில் உள்ள அதிகபடியான பாக்டீரியாக்களை அழித்து பெருங்குடலை சுத்தப்படுத்துகிறது. சில ஆய்வுகளின்படி, புற்றுநோயை கட்டுப்படுத்துதல் மற்றும் அழற்சியை தணிக்கும் திறன்களை வேப்ப இலைகள் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.கற்கண்டை பொறுத்தவரை, இருமல், சளியை போக்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கிறது. இது மருத்துவ குணம் கொண்டது மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. ரத்த சோகை, தலைச்சுற்றல், சோர்வு போன்றவற்றை போக்குகிறது. உணவுக்குப் பிறகு கற்கண்டு சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது.ஒரு நாள் ஒருமுறை சாப்பாடு
பிரதமர் மோடி ஒரு நேர்காணலின்போது, சதுர்மாஸ் காலக்கட்டத்தில் (உலக நன்மைக்காக இருக்கும் விரதம்) தனது ரெகுலர் உணவுப் பழக்கங்களை பற்றி பேசியுள்ளார். ஜூன் மாத இறுதியில் இருந்து நவம்பர் வரையிலான காலத்தில் சதுர்மாஸ் விரதம் இருப்பர். இந்த நான்கரை மாதங்களாக 24 மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றுவதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார். சூடான தண்ணீர்
அதேபோல், நவராத்திரியின்போது 9 நாட்களும் சாப்பாட்டை தவிர்த்து வெறும் சுடுதண்ணீர் மட்டுமே அருந்துவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். சூடான தண்ணீர், ஜீரணத்தை மேம்படுத்துகிறது. வயிற்று தசைகளை தளர்த்தி ரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதுடன், செரிமானத்தையும் தூண்டுகிறது. மலச்சிக்கலை குறைக்கிறது. உடலும் மனமும் இலகுவாகி நிம்மதியான தூக்கத்தையும் தரும் ஆற்றலை பெற்றது.முருங்கை ரொட்டி
பிரதமர் மோடி ஒரு வீடியோவில், முருங்கை ரொட்டியை (முருங்கை பராத்தா) தான் மிகவும் விரும்பும் உணவு என்று பேசியுள்ளார். இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முருங்கை உதவுகிறது. முருங்கை இலை அடிக்கடி சாப்பிடுவது நீரிழிவு நோயை தடுக்கிறது. முருங்கையில் உள்ள அதிக நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் அதன் இயற்கையான நச்சு நீக்கும் தன்மை, கல்லீரலை சுத்தப்படுத்துவதுடன், குடல் நுண்ணுயிர்களை சமநிலைப்படுத்தி மலச்சிக்கலை குறைக்கிறது.கிச்சடி
ஆரம்ப நாட்களில், கிச்சடியை அடிக்கடி சாப்பிட்டதாக பலமுறை பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆய்வுகளின்படி, 300 கிராம் கொண்ட பருப்பு கிச்சடியில் 17-18 கிராம் அளவிற்கு புரதச்சத்து நிரம்பியிருக்கிறது. தயிர் அல்லது மோருடன் சேர்த்து சாப்பிட்டால் 23.4 கிராம் புரதச்சத்தாக உயர்கிறது. காய்கறி சாலட் சேர்த்தால் ஊட்டச்சத்து மேலும் அதிகரிக்கும். கிச்சடி, புரத அளவு மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.வேம்பு, கற்கண்டு, சூடான தண்ணீர், முருங்கை, கிச்சடி என எளிமையான, இயற்கை சார்ந்த உணவு பழக்கங்களை கொண்டு, ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப உண்ணும் முறையை பின்பற்றி வரும் பிரதமர் மோடி, நாம் ஆரோக்கியமாக வாழ எடுத்துக்காட்டாக திகழ்கிறார்