இங்கே என் கண்முன்னே எதிர்கால ஒலிம்பியன்கள்
வினோத் நகர்:“எதிர்கால ஒலிம்பியன்களை இங்கே நான் பார்க்கிறேன்,” என, முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வுமான மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.மேற்கு டில்லியின் வினோத் நகரில் மண்டல தடகளப் போட்டிகள் நடந்தன. போட்டிகளை துவக்கி வைத்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான மணீஷ் சிசோடியா பேசியதாவது:கல்வித்துறையில் இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே செயல்திறன் இடைவெளி இல்லை.இன்று இருதரப்பிலுமே விளையாட்டு திறமைகள் உள்ளன. இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் ஒலிம்பியன்கள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு வீரர்களாக திகழ்வர் என்று கருதுகிறேன். சர்வதேச போட்டிகளில் அவர்கள் இந்தியக் கொடியை உயர்த்துவதை நாங்கள் பெருமையுடன் பார்ப்போம்.மண்டல விளையாட்டுப் போட்டிகளில் எங்களுடன் இவர்கள் இருந்தார்கள் என்று தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே நாங்கள் பெருமையுடன் கூறுவோம்.விளையாட்டு குறித்து பேசி மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.எனக்கு இப்போது 50 வயதாகிறது. இங்குள்ள சிறு குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கும்போது, இதையெல்லாம் நானும் என் குழந்தை பருவத்தில் செய்திருந்தால், இன்று எனக்கு முழங்கால் வலி வந்திருக்காது.இவ்வாறு அவர் பேசினார்.