காஸ் சிலிண்டர் விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆனது
ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியின் உனகல் அச்சவ்வா காலனியில், டிச., 23ல் மண்டபம் ஒன்றில், சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த பக்தர்கள், பஜனை நடத்தினர்.பக்தர்களுக்கு வழங்குவதற்காக அருகிலேயே பிரசாதமும் தயாரிக்கப்பட்டது. பஜனை முடிந்து அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மாலை அணிந்திருந்தவரின் கால் பட்டு, சிலிண்டர் கீழே விழுந்து, காஸ் கசிவு ஏற்பட்டது. அத்துடன் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டிருந்ததால், பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், ஒன்பது பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்த நிஜலிங்கப்பா, 58, சஞ்சய் சவதத்தி, 20, ராஜு மூகெரி, 21, லிங்கராஜு, 24, ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி சங்கர் சவனான், 29, மஞ்சுநாத் வாக்மோட், 22, ஆகிய இருவர் உயிரிழந்தனர். இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.பிரகாஷ் பரகர், 42, ஜேஸ்வர் சடாரே, 26, ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிறிய காயங்களுடன் வினய் பாரகர், 22, சிகிச்சை பெற்று உடல் நலம் தேறி வருகிறார்.