பழங்குடி மக்களுக்கு ஆயுத உரிமம் தரும் அசாம் அரசு
திஸ்பூர்: சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்கு மாநில அரசு ஆயுத உரிமம் வழங்கும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இன்று மாநிலத்தில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடி மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு ஆயுத உரிமம் வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. இந்த நடவடிக்கை, அசாமின் ஜாதி, மதம் மற்றும் அதன் நலன் சார்ந்த பாதுகாப்புக்கே ஆகும். அதுதான் நோக்கமும் கூட. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.இதே விஷயத்தை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தமது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். மாநில அரசின் ஒப்புதலின்படி, குற்றப்பின்னணி இல்லாத, தகுதியான அளவுகோல்களின் கீழுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஆயுத உரிமங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.