தங்கவயல் செக் போஸ்ட்!
மாநிலத்தில் பஸ் நிலையத்துக்குள் மதுபான கடைகள் எங்குமே இல்லன்னு சொல்லக் கூடாதென்பதற்காக கோல்டு சிட்டி ரா.பேட்டை பஸ் நிலையத்தில் மது விற்பனை கடைகள் இருக்குதோ.இது சட்ட விரோத விற்பனைனு சொல்ல வாய்ப்பே இல்லை. ஏன்னா, பஸ் நிலையத்தில் மதுபான கடைகள் வைக்க முனிசி, காக்கி, கலால் துறை என எல்லோருமே 'நோ அப்ஜக் ஷன்' கொடுத்திருக்காங்களாம். மது விற்பனை செய்ய தான், அனுமதி கொடுத்தாங்களே தவிர, அங்கேயே ஊத்தி குடிக்க அனுமதி தரலன்னு வேறு நொண்டி சாக்கு சொல்றாங்க. ஆனாலும் மது விற்பனையும், கடைக்குள்ளேயே ஊத்திக் குடிக்கிறதுக்கும் செம ஜாலியா தான் தர்பார் செய்றாங்க.பஸ் நிலையத்திற்குள் சாக்கடை, வடிகால் நிரம்பி அடைப்பு ஏற்பட்டு வருவதாக இப்பத்தான் முனிசி, ஆபீசர்களுக்கு கவனத்துக்கு வந்திருக்குதாம். எல்லா மது பாட்டில்கள் பாக்கெட்டுகள் அடைப்பை ஏற்படுத்துதாம்.இதனால் துர்நாற்றம் வீசும் பஸ் நிலையம் மீது கவனம் செலுத்தி, மதுக்கடைக்குள் குடிக்க தடை போட்டிருக்காங்க. ஆனால் விற்பனைக்கு தடையில்லையாம். அது தாராளமயமாம்.பஸ் நிலையத்தில் மது விற்க கலால் சட்டம் அனுமதிக்குதா. அப்படின்னா மாநிலத்தில் எந்த பஸ் நிலையத்தில் மது விற்கப்படுதுன்னு பட்டியல் காட்டுவாங்களா. அப்படி என்ன, இங்கு மட்டும் ஸ்பெஷல் பெர்மிஷன்.கோளாறு உள்ள மாவட்டத்தில், பெரிய கை கட்சி தலைவரோட 'ஜகல குண்டே' வன நிலம் ஆக்ரமிப்பை, சமாளிக்க அரசு என்ன செய்யப் போகுதுன்னு மாநிலமே எதிர்ப்பார்க்குது.கைக்காரங்ககிட்ட உள்ள வன நிலத்தை கையகப்படுத்தாம இருக்க சட்ட ஓட்டைகளை தேடுறாங்களாம். இதுக்காக, ஜனவரி 2ம் தேதி நடத்த இருந்த வன நில சர்வே பணியை, 15ம் தேதிக்கு மாத்திட்டாங்களாம். எத்தனை சர்வே பணிகள் நடத்தினாலும், நில அபகரிப்புக்கு அரசு ஆப்பு வைக்குமா என்பது தான் கேள்வி.நுாற்றுக்கணக்கான நடைபாதை கடைகளை அகற்றிய அரசு, பல ஏக்கர் வன நிலத்தை 'ஸ்வாஹா' செய்திருப்பதை எப்படி அனுமதிக்கிறாங்களோ. பல கோடி ரூபாய் மதிப்புள்ள வன நிலத்தை, சட்டம் தெரிந்தவரே அமுக்கிட்டதாக தெரிய வந்தும், அதனை அரசு மீட்காம துணை போவதாக எதிரணியினர் அம்பு விடுறாங்க.முடா நிலம் முழுங்க பார்த்தவரின் நெருங்கிய, 'சகா' ஒருத்தரு வன நிலத்தை வளைத்து போட்டிருப்பது சந்தி சிரிக்குது.ப.பேட்டைக்காரரும் ஏரி நிலத்தை சுருட்டி சொந்தமான மெகா சிட்டியை உருவாக்கியதாக பல புகார்கள் பரவி கிடக்குது. இந்த கை ஆட்சியில், அரசு நிலம் என்னாகுமோ.ப.பேட்டையில் கோல்டு சிட்டியும் இணைந்திருந்த நேரத்தில் குடிநீருக்காக, எரகோள் அணை கட்டும் பணிகள் நடந்தன. அதனை திறப்பதற்குள், கோல்டு சிட்டியை தனி தாலுகாவாக பிரிச்சிட்டாங்க. இதனால் ப.பேட்டைக்கு கிடைக்கிற குடிநீர், கோல்டு சிட்டிக்கும் கிடைக்க வேணும். ஆனா கிடைச்ச பாடில்லை.கோல்டன் சிட்டி தொகுதி வளர்ச்சிக்கு அரசு ஒதுக்கிய நிதியை ஆரம்பத்திலேயே, அணை கட்டுவதற்காக, தமது பங்களிப்பை வழங்கினாங்க. எங்களுக்கும் எரகோள் குடிநீர் கேட்டு பெற உரிமை இருக்குதென குரல் எழுப்ப வேண்டும். ஆனா, செங்கோட்டைக்காரர், அசெம்பிளிக்காரர் மவுனமாக இருந்தால் எரகோள் அணை குடிநீர் கோல்டு சிட்டிக்கு பங்கு கிடைத்திடுமா.பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 99 'லேப் டாப்'கள் மாணவர்களுக்காக வாங்கினாங்களே தவிர, அதனை மாணவர்களுக்கு போய் சேர்ந்ததா. பூதக்கண்ணாடியை வைத்து தேடுறாங்க. எல்லாமே, மக்கள் வரி பணத்தில் வாங்கினது. அதனை பதுக்கி வெச்சிருக்காங்களா அல்லது வித்து சாப்பிட்டாங்களா. இந்த பிரச்னை ரீல், முனிசி.,யில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த முறைகேடுகள் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றா வெளியே கசிய துவங்கியிருக்கு. விரைவில் எல்லாமே வெளிச்சத்துக்கு வரும்னு சொல்றாங்க.