ஜி.எஸ்.டி., குறைப்பு பொருளாதாரத்திற்கு முக்கிய வரப்பிரசாதம்
புதுடில்லி:''ஜி.எஸ்.டி., குறைப்பு நாட்டுக்கு நல்லது. அதற்கான முடிவு, இந்திய பொருளாதாரத்தின் முக்கிய மைல் கல்; நாட்டின் பொருளாதாரத்திற்கு வரப்பிரசாதம்,'' என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார். ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், நேற்று முன்தினம் பங்கேற்ற முதல்வர் ரேகா குப்தா, பின், நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரத்திற்கு ஜி.எஸ்.டி., குறைப்பு நன்மை பயக்கக் கூடியது. சுகாதார காப்பீடு மற்றும் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களுக்கான வரி குறைப்பு, பல கோடி மக்களுக்கு பயன் அளிக்கக் கூடியது. அதற்காக இந்த நாட்டு மக்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பர். ஜி.எஸ்.டி., வரி குறைப்பு தொடர்பாக, கவுன்சில் மேற்கொண்ட முடிவு, உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் நடந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடியது. இந்த முடிவால், டில்லி அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த முடிவு எடுக்க துணையாக இருந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறோம். குறிப்பாக, சுகாதார காப்பீடு திட்டம் மற்றும் கல்விக்கு, பூஜ்யம் வரி விதிப்பு வரவேற்கக் கூடியது. இவ்வாறு ரேகா குப்தா கூறினார்.