புதுடில்லி: குஜராத்தில், லோக் ஆயுக்தா நீதிபதியை முதல்வரை கேட்காமல் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., ரகளையில் இறங்கியதால், லோக்சபா, ராஜ்யசபா என, இரு அவைகளும் முடங்கின. ஏழாவது நாளாக பார்லிமென்டின் அலுவல்கள் தடைபட்டுள்ளதால், ஏராளமான மசோதாக்களை, நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.குஜராத் லோக் ஆயுக்தா நீதிமன்றதுக்கு, கவர்னர் கமலா தேவி, நீதிபதியை நியமித்த விவகாரம், கடந்தவாரம் செவ்வாய்க் கிழமை பார்லிமென்டில் வெடித்தது. அன்றிலிருந்து, பார்லிமென்டின் இரு அவைகளையுமே பா.ஜ., எம்.பி.,க்கள் கிடுகிடுக்க வைத்து வருகின்றனர். தினந்தோறும், இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறைக்கு பின், மீண்டும் நேற்று அவை கூடியது. நேற்றும், பார்லிமென்டின் இரு அவைகளுமே முற்றிலுமாக ஸ்தம்பிக்க நேர்ந்தது. லோக்சபாவில் கேள்வி நேரம் முதலில் ரத்தானது. பிறகு ஜீரோ நேரமும் காலியானது. மதிய உணவு வேளைக்கு பிறகும் அவையை நடத்த முடியவில்லை. உ.பி.,யில், லிக்கம்பூர்கேரி என்ற இடத்தில் வழக்கறிஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்துக்காக, சமாஜ்வாடி கட்சி எம்.பி.,க்கள், ரகளையில் இறங்கினர். அம்மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை எனக்கூறி அவர்கள் அமளியில் இறங்கவே, வேறு வழியின்றி அவை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவிலும் இதே கதை தொடர்ந்தது. அவைத் தலைவர் அன்சாரியால் கேள்வி நேரத்தை நடத்த முடியாமல் ஒத்திவைத்துச் செல்ல நேர்ந்தது. பா.ஜ., எம்.பி.,க்களின் தொடர் அமளியால், ஜீரோ நேரத்திலும் பணிகள் நடக்க முடியவில்லை. மதிய உணவு இடைவேளைக்கு பிறகும் கூச்சல் குழப்பம் காரணமாக, அவை அலுவல்கள் நடக்கவில்லை. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பெரும்பாலும் மசோதாக்கள் நிறைவேற்றம் தான் அதிகமாக இருக்கும். ஆனால், இக்கூட்டத்தொடர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதால், பணிகள் நடைபெறாமல் உள்ளன. இன்னும், 10 மசோதாக்களுக்கு மேல், நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளதாக தெரிகிறது.தொடர்ச்சியாக ஏழு நாட்கள் அவை அலுவல்கள் நடைபெறவில்லை. இதனால், எந்த விவாதமும் அவையில் நடைபெற முடியாத நிலை உள்ளது. வரும் வியாழக் கிழமையுடன் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெறவுள்ளதால், அடுத்து இரு நாட்களுக்கும் இதே நிலை தொடருமானால், கடைசி நாளன்று அனைத்து மசோதாக்களையும் ஒரு சேர கூட்டாஞ்சோறு போல போட்டு நிறைவேற்ற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால், மசோதாக்களின் மீது விவாதம் ஏதும் நடைபெற, பெரிய அளவில் வாய்ப்பும் இருக்காது என கருதப்படுகிறது.ஆட்சியைப் பிடிக்க காங்., புதுத் திட்டம் : காங்கிரஸ் கட்சி பேச்சாளர் மணிஷ் தோஷி கூறியதாவது: குஜராத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, சட்டசபை தேர்தலில், ஊழல் குறித்த, பிரசாரம் பிரதானமாக இருக்கும். லோக் ஆயுக்தா விவகாரத்தில், மோடி அரசின் செயல்பாடு குறித்து, ஒரு வார காலத்திற்கு மக்களிடையே பிரசாரம் செய்வோம். மோடி அரசின் இரட்டை வேடம் குறித்து, மக்களிடையே விரிவாக விளக்கிக் கூறுவோம். மேலும், பிரசாரத்தின் போது, மாணவர்கள், விவசாயிகள், சிறுபான்மையினர், பெண்கள், பின்தங்கியவர்கள் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் பிரச்னைகளை மோடி அரசு மறந்து விட்டது. இந்த பிரச்னைகள் குறித்து, மக்களிடையே பேசுவோம். அன்னா ஹசாரேவின் போராட்டம் மக்களிடையே நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எங்களின் பிரசாரம், மக்களிடையே பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், காங்கிரஸ் இங்கு பெரிய அளவில் வெற்றி பெறும்இவ்வாறு மணிஷ் தோஷி கூறியுள்ளார்.