லாரி கொள்ளையருடன் துப்பாக்கி சண்டை
கிராரி சுலேமான் நகர்: டில்லியின் புறநகர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டைக்கு பின் மூன்று கொள்ளையர் கைது செய்யப்பட்டனர்.லாரி ஓட்டுநர்களை குறிவைத்து ஒரு கும்பல் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. செவ்வாய், புதன்கிழமையும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தன.மர்ம நபர்கள், லாரி ஓட்டுநர்களின் மொபைல் போன்களை பறித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களை தாக்கியதாகவும் புகார் எழுந்தது.அதன்பேரில் கிராரி ரயில்வே கிராசிங் பகுதிக்கு விரைந்த போலீசார், சந்தேகத்திற்கு இடமான ஒரு கும்பலை மறித்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் சுடத்துவங்கியது. போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்திருந்ததால் எஸ்.ஐ., உயிர் தப்பினார். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேருக்கு குண்டடிக்காயம் ஏற்பட்டது. ராஜேஷ், 25, குர்ஷித், 24, நிதின், 24, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.இந்த கும்பல், லாரி ஓட்டுநர்களை குறிவைத்து கைவரிசை காட்டியது விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.