| ADDED : மே 20, 2025 01:23 PM
ஐதராபாத்; தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; ஹைதராபாத்தில் தெலுங்கானா கவர்னர் மாளிகை உள்ளது. இங்கு சுதர்ம பவன் என்ற வளாகம் இருக்கிறது. மே 14ம் தேதி இந்த வளாகத்தில் ஆவணங்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிகாரிகள் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அப்போது, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், உள்ளே நுழைந்து ஆவணங்கள், சில ஹார்ட் டிஸ்குகளை எடுத்துச் செல்வது தெரிந்தது. இதையடுத்து, கவர்னர் மாளிகை அதிகாரிகள் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.தீவிர விசாரணை நடத்திய போலீசார், கணினி என்ஜினியர் சீனிவாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது; கைது செய்யப்பட்ட சீனிவாஸ் என்பவர் கவர்னர் மாளிகை ஊழியர். பணியில் இருந்த தற்காலிக பெண் பணியாளரை செல்போனில் போட்டோ எடுத்து, அதை மார்பிங் செய்து சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே அனுப்பி மிரட்டி உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், மே 12ம் தேதி சீனிவாசை கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தோம். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரை கவர்னர் மாளிகை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.பின்னர்,கவர்னர் மாளிகையில் தமது அலுவலக பயன்பாட்டுக்காக கொடுக்கப்பட்ட கணினியில் தாம் எடுத்த போட்டோக்களை பதிவேற்றி இருந்திருக்கிறார். அவற்றை எடுத்துச் சென்று அழிக்கவே கவர்னர் மாளிகையில் நுழைந்து ஹார்ட் டிஸ்கை திருடிச் சென்றுள்ளார். தற்போது அவர் மீது மற்றொரு வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.