பயிர்க்கழிவு எரித்த விவசாயிகள் ஹரியானாவில் அதிரடி கைது
சண்டிகர், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, ஹரியானாவில் உள்ள விளைநிலங்களில் பயிர் கழிவுகளை எரித்த 14 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் அறுவடை முடிந்ததும், பயிர்க்கழிவுகளை எரிப்பதை வழக்கமாக வைத்து உள்ளனர். இதனால், டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசு ஏற்படுகிறது. பொது மக்கள் பலரும் மூச்சுத்திணறல், சுவாசத் தொற்று நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆண்டுதோறும் இப்பிரச்னை எழுந்து வரும் நிலையில், இதை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கிடையே, காற்று தர மேலாண்மை கமிஷனின் உத்தரவுகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மசிக், ஏ.அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஹரியானா மற்றும் பஞ்சாப் அரசுகளை கடுமையாக சாடியது.இதுபோன்ற பயிர் கழிவுகளை எரிப்பவர்கள் மீது ஒரு வாரத்திற்குள் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், இரு மாநிலங்களின் தலைமைச் செயலர்களை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம் எனவும் எச்சரித்திருந்தனர்.இந்நிலையில், ஹரியானாவின் கைதால் மாவட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.இதையடுத்து, அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக, விளைநிலங்களில் பயிர் கழிவுகளை எரித்த, 14 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். பின், அவர்கள் அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இதேபோல் பானிபட், யமுனாநகர் ஆகிய மாவட்டங்களிலும் பயிர் கழிவுகளை எரித்த விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.