தோட்டக்கலை பயிர்களுக்கு ஹரியானா அரசு மானியம்
சண்டிகர்: தோட்டக்கலை பயிர்களை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்க, ஹரியானா அரசு மானியம் அறிவித்துள்ளது. ஹரியானா அரசின் தோட்டக்கலைத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: பழங்கள், காய்கறிகள், பூக்கள் மற்றும் மசாலாப் பொருட்களை அதிகளவில் விளைவிக்க, விவசாயிகளை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. புதிய பழத்தோட்டம் அமைத்தல், ஒருங்கிணைந்த காய்கறி தோட்டம் அமைத்தல், மசாலாப் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை ஹரியானாவில் அதிகளவில் விளைவிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. புதிய பழத்தோட்டம் அமைத்தால் ஏக்கருக்கு, 24,500 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 40,000 வரை மானியம் வழங்கப்படும். ஒருங்கிணைந்த காய்கறி தோட்டத்துக்கு ஏக்கருக்கு 15,000 ரூபாய், இதுவே, பட்டியல் இன விவசாயிக்கு ஏக்கருக்கு 25,500 ரூபாய் வழங்கப்படும். அதேபோல, மசாலா பொருட்கள் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு 15,000 ரூபாய் முதல் 30,000 ரூபாயும், பூ வகைகளுக்கு ஒரு ஏக்கருக்கு 8,000 ரூபாய் முதல் 40,000 ரூபாயும், நறுமணப் பயிர்களுக்கு ஏக்கருக்கு 8,000 ரூபாயும் மானியம் வழங்கப்படும். மானியத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதிகபட்சமாக 5 ஏக்கர் பயிரிடலாம். இந்தத் திட்டங்களில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள், hortnet.hortharyana.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.