| ADDED : டிச 14, 2024 01:42 PM
புதுடில்லி: டில்லியை நோக்கி விவசாயிகள் இன்று (டிச.,14) மீண்டும் பேரணியாக செல்ல முயன்றனர். ஹரியானாவில் போலீசார் தடுத்தி நிறுத்தனார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்; விவசாய கடன் தள்ளுபடி; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்., 13 முதல், 'டில்லி சலோ' போராட்டத்தை, ஹரியானா - பஞ்சாப் எல்லைகளான ஷம்பு, கானவுரி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தால், டில்லியின் எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ஷம்பு எல்லையில் இருந்து இன்று (டிச.,14) மீண்டும் டில்லிக்கு செல்ல முயன்ற விவசாயிகள் மீது, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் தடுத்து நிறுத்தினர். ஹரியானா, பஞ்சாப் எல்லையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.எங்கள் உரிமை
'நாங்கள் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும். தலைநகருக்கு சென்று போராட்டம் நடத்துவது எங்கள் உரிமை' என பேரணியில் பங்கேற்ற விவசாயி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே, ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள 12 கிராமங்களில் இன்று (டிச.,14) முதல் டிசம்பர் 17ம் தேதி வரை இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வங்கி சேவைகள் தொடர்ந்து செயல்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.