மேகவெடிப்பால் கனமழை ஹிமாச்சலில் 11 பேர் பலி
சிம்லா: ஹிமாச்சலின் மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கால், 11 பேர் உயிரிழந்தனர். ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மேக வெடிப்பால் கனமழை பெய்கிறது. நேற்று முன்தினம் மட்டும் மண்டி உள்ளிட்ட இடங்களில் மேக வெடிப்புகள் ஏற்பட்டன. கோர் பகுதியில் நான்கு இடங்களிலும், கர்சோக் பகுதியில் மூன்றும், தரம்பூரில் இரண்டு, துணாக் மற்றும் மண்டியில் தலா ஒரு இடத்திலும் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் நான்கு இடங்களில் பெரும் வெள்ளப்பெருக்கும், ஒரு இடத்தில் பெரிய நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய மேலும் ஆறு உடல்கள் மீட்கப்பட்டன. மண்டியில் மேக வெடிப்பால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.கனமழை காரணமாக, இதுவரை 282 சாலைகள் மூடப்பட்டுள்ளன. 1,361 டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் 639 மின் உற்பத்தி மையங்கள் பாதிப்படைந்துள்ளன.