உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யூனியன் கார்பைட் கழிவுகளை அழிக்க 6 வார அவகாசம் அளித்தது ஐகோர்ட்

யூனியன் கார்பைட் கழிவுகளை அழிக்க 6 வார அவகாசம் அளித்தது ஐகோர்ட்

போபால் : 'யூனியன் கார்பைட்' தொழிற்சாலையில் இருந்து அகற்றப்பட்ட நச்சுக் கழிவுகளை, உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் அழிப்பதற்கு, மத்திய பிரதேச அரசுக்கு ஆறு வாரம் அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.மத்திய பிரதேசத்தின் போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைட் உர தொழிற்சாலையில் இருந்து, 1984 டிசம்பர் 23 நள்ளிரவு விஷ வாயு கசிவு ஏற்பட்டது.

விஷ வாயு கசிவு

இதன் தாக்கத்தால், 5,479 பேர் உயிரிழந்தனர்; 1,000த்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர ஊனம் மற்றும் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டனர்.விஷ வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் இருந்து நச்சுக்கழிவுகள் 40 ஆண்டு களாக அகற்றப்படாமல் இருந்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்த ம.பி., உயர் நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் கழிவுகளை அகற்றும்படி கடந்த மாதம் 3ம் தேதி உத்தரவிட்டது.இதை தொடர்ந்து, போபாலில் இருந்து 250 கி.மீ., தொலைவில் உள்ள தார் மாவட்டத்தின் பிதாம்புர் என்ற இடத்தில், நச்சுக்கழிவுகளை அழிக்க அரசு முடிவு செய்தது. யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் உள்ள கழிவுகள், 12 கன்டெய்னர்களில் ஏற்றப்பட்டு உச்சபட்ச பாதுகாப்புடன் கடந்த 2ம் தேதி பிதாம்புர் வந்தடைந்தன.

நம்பிக்கை

நச்சுக்கழிவுகளை பிதாம்புரில் அழிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடந்த போராட்டத்தில், இருவர் தீ குளிக்க முயன்றனர். இந்த வழக்கு, ம.பி., உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பிரசாந்த் சிங் வாதிடுகையில், ''நச்சுக்கழிவுகளை அழிப்பது தொடர்பாக பல தவறான செய்திகளும், கட்டுக் கதைகளும் ஊடகங்கள் வாயிலாக பரவுகின்றன. ''இதனால், மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. அவர்கள் மனதில் இருந்து பயத்தை அகற்றி, நம்பிக்கை ஏற்படுத்த அவகாசம் தேவைப்படுகிறது,'' என, வாதிட்டார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நச்சுக்கழிவுகளை உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் அழிப்பதற்கு மத்திய பிரதேச அரசுக்கு ஆறு வாரம் அவகாசம் அளித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என, ஊடகங்களுக்கு அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜன 07, 2025 11:53

கழிவுகள் உருவாகி நாபது வருஷமா தூங்கிட்டு இப்ப 6 மாசம் டைம் குடுக்கிறவங்க கடனை உணர்ச்சிக்கு எல்லையே கிடையாதாடா?


தாமரை மலர்கிறது
ஜன 07, 2025 00:33

மத்தியபிரதேச மக்கள் பயந்தால், அந்த கழிவை படித்த நிறைய மக்கள் உள்ள புரிந்துகொள்ள கூடிய வேறொரு மாநிலத்திற்கு எடுத்துசென்று எரித்து அழிக்கலாம். அதை வைத்துக்கொண்டு அடைகாத்து தான் ஆபத்து. கேரளாவிலிருந்து ஏற்கனவே பல கழிவுகள் தமிழகத்திற்கு பார்சல் செய்யப்படுகிறது. அதையெல்லாம் திராவிட கட்சிகள் ஏற்றுக்கொள்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை