உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் 42 சதவீத ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டுக்கு ஐகோர்ட் தடை

தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் 42 சதவீத ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டுக்கு ஐகோர்ட் தடை

ஹைதராபாத்: 'உச்ச நீதிமன்றம் வரையறுத்த, 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பு உள்ளாட்சி தேர்தலுக்கும் பொருந்தும்' என, தெலுங்கானா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டுமெனில், அதுவும் உச்ச நீதிமன்றம் வரையறுத்த, 'மூன்று சோதனை' கட்டமைப்பிற்குள் இருக்க வேண்டும் எனவும் உத் தரவிட்டுள்ளது. விசாரணை தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் அக்., மற்றும் நவ., மாதங்களில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு, 42 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த அம்மாநில காங்., அரசு முடிவு செய்தது. மேலும், இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ரேவந்த் ரெட்டி அரசின் இந்நடவடிக்கைக்கு எதிராக தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக, பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங், நீதிபதி மொஹியுதின் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது குறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உள்ளாட்சித் தேர்தல்களில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த, 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு பொருந்தும். ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கூடுதலாக இடஒதுக்கீடு வழங் க வேண்டுமெனில், அதுவும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த 'மூன்று சோதனை' கட்டமைப்பிற்குள்ளேயே இருக்க வேண்டும். இது தொடர்பாக, மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதற்கு நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கப் படுகிறது. அவகாசம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நாளில் இருந்து எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க, இரு வாரங்கள் அவகாசம் தரப்படும். அதுவரை, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்வதாக மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

'மூன்று சோதனை' என்றால் என்ன?

உள்ளாட்சித் தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக உச்ச நீதிமன்றம், 'மூன்று சோதனை' என்ற கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. அதாவது, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மாநிலங்கள் முதலில், தரவுகளை சேகரிக்க ஒரு கமிஷனை அமைக்க வேண்டும். அதன் பரிந்துரை அடிப்படையில் இடஒதுக்கீடு விகிதாசாரத்தை வரையறுக்க வேண்டும். அதன் பின் மொத்த சீட்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்படுவது, 50 சதவீதத்திற்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி