உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்: நவ., 20 வரை ஐகோர்ட் அவகாசம்

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்: நவ., 20 வரை ஐகோர்ட் அவகாசம்

பெங்களூரு: கர்நாடகாவில், வாகனங்களுக்கு எச்.எஸ்.ஆர்.பி., எனும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்த, நவ., 20ம் தேதி வரை அவகாசம் அளித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவில் திருட்டு, குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்கள், வாகனங்களை திருடி, நம்பர் பிளேட்களை மாற்றி பயன்படுத்துகின்றனர்.இதை தடுக்க கர்நாடக அரசு முடிவு செய்தது. இதற்காக, 2019 ஏப்ரல் 1ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், 2023 நவ., 17ம் தேதிக்குள், எச்.எஸ்.ஆர்.பி., எனும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என்று 2023 ஆகஸ்டில் போக்குவரத்து துறை உத்தரவிட்டிருந்தது.கர்நாடகாவில் இதுவரை 55 லட்சம் வாகனங்கள் மட்டுமே எச்.எஸ்.ஆர்.பி., பிளேட்டை பொருத்தியுள்ளன. இன்னும், 1.45 கோடி வாகனங்கள் பொருத்த வேண்டி உள்ளது.இந்த நம்பர் பிளேட் பதிவு இணையத்தில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்னை, நம்பர் பிளேட் பொருத்தும் மையங்களில், நீண்ட வரிசையில் காத்திருப்பு, பிளேட் கிடைப்பதில் தாமதம், சரியான தகவல் அளித்தும், தவறான நம்பர் பிளேட் வினியோகித்தது; பழைய வாகனங்கள் பதிவு செய்வதில் பிரச்னை உட்பட பல காரணங்களால் தாமதம் ஏற்படுகிறது.இதை உணர்ந்த போக்குவரத்து துறை, நம்பர் பிளேட் மாற்ற, 2024 பிப்., 17; மே 17; செப்., 15ம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது. கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து, வாகன உரிமையாளர்கள் சிலர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இம்மனு, நேற்று நீதிபதிகள் காமேஸ்வர ராவ், ராஜேஷ் ராய் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகன உரிமையாளர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வாதிடுகையில், ''கர்நாடகாவில் இன்னும் பாதிக்கும் மேற்பட்டோர் எச்.எஸ்.ஆர்.பி., நம்பர் பிளேட் பொருத்தவில்லை. எனவே, நம்பர் பிளேட் பொருத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்,'' என்று கேட்டு கொண்டார்.வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவ., 20ம் தேதிக்கு ஒத்திவைத்து, அதுவரை நம்பர் பிளேட் பொருத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும்உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி