எச்.எம்.பி.வி., தொற்று: கண்காணிப்பு அவசியம்
புதுடில்லி: எச்.எம்.பி.வி., எனப்படும், 'ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ்' பரவல் சீனாவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் சென்னை, சேலம், கர்நாடகாவின் பெங்களூரு, குஜராத்தின் ஆமதாபாத் நகரங்களில் ஐந்து குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி., தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, எச்.எம்.பி.வி., தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலர் புன்யா சலீலா ஸ்ரீவஸ்தவா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.இதன்பின், சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:எச்.எம்.பி.வி., என்பது அனைத்து வயதினருக்கும் சுவாச நோய்களை உண்டாக்க கூடிய வைரஸ் என்பது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின்படி, 'இன்ப்ளுயன்ஸா' மற்றும் தீவிர சுவாச நோய்கள் நம் நாட்டில் வழக்கத்துக்கு மாறாக அதிகரிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ், 2001 முதலே உலக அளவில் உள்ளது. தற்போது புதிதாக உருவான வைரஸ் அல்ல. எனவே அச்சப்பட தேவையில்லை.'இன்ப்ளுயன்ஸா' மற்றும் தீவிர சுவாச நோய் பரவல் அதிகரிக்கிறதா என்பதை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தொடர்ந்து கண்காணிக்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாக்பூரில் தொற்று?
மஹாராஷ்டிராவின் நாக்பூரில், 7 மற்றும் 14 வயது குழந்தைகள் இருவருக்கு எச்.எம்.பி.வி., தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.இதையடுத்து அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது. குழந்தைகள் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இதற்கிடையே, ''சென்னை, சேலத்தில் எச்.எம்.பி.வி., தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் இருப்பதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை,'' என, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று கூறினார்.