சபரிமலை பக்தர்களுக்காக நிலக்கல்லில் மருத்துவமனை
பத்தனம்திட்டா: சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, நிலக்கல் பகுதியில் மேம்பட்ட சிறப்பு மருத்துவமனையை நிறுவ கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலைக்கு, உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிகமாக வருகை தருகின்றனர். வரும் 17ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்கவுள்ளதால், தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில், அடிவார மருத்துவமனையை அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று வெளியிட்ட அறிக்கை: சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலனை உறுதி செய்யும் வகையில், நிலக்கல்லில் மருத்துவமனை கட்ட அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. மொத்தம், 10,700 சதுர அடி பரப்பில் இந்த மருத்துவமனை அமையவுள்ளது. வெளிப்புற நோயாளிகளுக்காக மூன்று அறைகள், அவசரகால சிகிச்சை துறை, நர்சுகள் மையம், இ.சி.ஜி., அறை, தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மருந்தகம் ஆகியவை இந்த மருத்துவமனையில் செயல்படும். முதல் மாடியில் எக்ஸ்ரே அறை, ஆப்பரேஷன் தியேட்டர்கள் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமின்றி, உள்ளூர் மக்களுக்காகவும், இந்த மருத்துவமனை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, நிலக்கல் மகாதேவர் கோவில் அருகே இன்று நடக்கிறது. இதில், சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், துணை சபாநாயகர் சிட்டயாம் கோபகுமார், திருவிதாங்கூர் தேவசம் தலைவர் பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.