உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வகுப்பறையே இல்லாமல் எப்படி பள்ளி நடத்துவது? டில்லி மாநகராட்சிக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

வகுப்பறையே இல்லாமல் எப்படி பள்ளி நடத்துவது? டில்லி மாநகராட்சிக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

புதுடில்லி:'வகுப்பறையே இல்லாமல், வெறும் சுற்றுச் சுவர், கழிப்பறையை மட்டும் வைத்துக் கொண்டு பள்ளிக்கூடம் நடத்த முடியுமா' என, டில்லி மாநகராட்சிக்கும், தொல்லியல் துறைக்கும், டில்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பிஉள்ளது. தெற்கு டில்லியில் உள்ள கிர்கி என்ற பகுதியில், மாநகராட்சி துவக்கப் பள்ளி இயங்கி வந்தது. இது, பழமையான பள்ளி என்பதால், சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, இங்கு படித்து வந்த, 350 மாணவர்கள், 2012ல் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த பள்ளிக்கு அருகில், இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் இருந்தது. சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தொல்லியல் துறையின் அனுமதி தேவைப்பட்டது. இதனால், பள்ளியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

உத்தரவு

இது தொடர்பாக, இந்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் சங்கம் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த, 2023ல் இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி டில்லி மாநகராட்சிக்கும், தொல்லியல் துறைக்கும் உத்தரவிட்டது. ஆனால், சிறிய அளவிலான பழுது பார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.கே.உபத்யாயா தலைமையிலான அமர்வு முன், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:பள்ளியில் கட்டடங்களை மீண்டும் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டும், தொல்லியல் துறையும், டில்லி மாநகராட்சியும் இந்த விஷயத்தில் முறையாக செயல்படவில்லை.

விண்ணப்பம்

கழிப்பறை, சுற்றுச்சுவர் ஆகியவற்றை மட்டும் வைத்து எப்படி பள்ளி நடத்துவது? வகுப்பறையே இல்லாமல் பள்ளி நடத்த முடியுமா? எனவே, பள்ளியில் வகுப்பறைகள் கட்டுவதற்கு, மாநகராட்சி சார்பில் முறையாக தொல்லியல் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்து, இரண்டு மாதங்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். என கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ