ஈரானிய பெண்ணுடனான கள்ள தொடர்பை கண்டித்த மனைவியை கொன்ற கணவர்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில், ஈரானிய பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை கண்டித்த மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று வீசிய கம்ப்யூட்டர் இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஏற்றுமானுார் குருவிளங்காட்டைச் சேர்ந்தவர் சாம் ஜார்ஜ், 59. இவரது மனைவி ஜெஸ்ஸி, 49. இவர்களுக்கு, இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூவரும் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர். கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு, 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். வீட்டின் கீழ் தளத்தில் சாம் ஜார்ஜும், மேல் தளத்தில் ஜெஸ்ஸியும் வசித்து வந்தனர். சாம் ஜார்ஜ் கேரளாவில் உள்ள ஒரு பல்கலையில் படித்து வருகிறார். உடன் படிக்கும் ஈரானிய பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரை, அடிக்கடி வீட்டுக்கும் அழைத்து வந்தார். இதனால் ஜெஸ்ஸி, கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இதனால், மனைவியை கொல்ல சாம்ஜார்ஜ் முடிவு செய்தார். 'பெப்பர் ஸ்ப்ரே'யை மனைவி முகத்தில் தெளித்து நிலைகுலைய வைத்த பின், படுக்கையறைக்கு இழுத்துச் சென்று, கழுத்தை இறுக்கி சாம் ஜார்ஜ் கொலை செய்தார். பின் நள்ளிரவில், உடலை காரில் வைத்து இடுக்கி உடுப்பன்னுார் செப்புக்குளம் வியூ பாயின்டுக்கு எடுத்துச் சென்று, 50 அடி பள்ளத்தில் வீசினார். மகள், மகன்கள் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது ஜெஸ்ஸி எடுக்கா ததால், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டிற்கு சென்ற போது ஜெஸ்ஸி இல்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரித்த போது, சாம்ஜார்ஜ் கர்நாடகா சென்றது தெரிந்தது. பின், ஈரானிய பெண்ணுடன் மைசூரில் இருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது, மனைவியை கொலை செய்து பள்ளத்தாக்கில் வீசியது தெரிந் தது. ஈரானிய பெண்ணிடமும் விசாரணை நடக்கிறது. ஜெஸ்ஸி உடல் தீயணைப்பு துறையினர் உத வியுடன் மீட்கப்பட்டது.