உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உதவிக்கு யாருமின்றி அனாதையாக தவிக்கிறேன்!

உதவிக்கு யாருமின்றி அனாதையாக தவிக்கிறேன்!

திருச்சி அரசு மருத்துவமனை வாசலில், நோயாளிகளுக்கு தேவையான துண்டு, கைக்குட்டை, லுங்கி மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு மை, சங்கு போன்ற பொருட்களை விற்பனை செய்து வரும் கஸ்துாரி: எனக்கு இப்ப, 66 வயசாகுது. 10 வருஷமா இங்கு கடை போடுறேன். 13 வயதில் திருமணமானது. என், 23வது வயதில், கணவர் புற்றுநோய் பாதிப்பில் இறந்து விட்டார். மூன்று பெண் குழந்தைகள்; இரண்டு குழந்தைகள் நோய் வந்து, குழந்தையாக இருக்கும்போதே இறந்து விட்டன. ஒரு பெண்ணை படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்தேன். அதற்கு மூன்று குழந்தைகள்; அனைவருக்கும் திருமணமாகி வேறு வேறு ஊருக்கு சென்று விட்டனர். அந்த ஒரு மகளும் மாரடைப்பில் இறந்து விட்டாள். அதன்பின் எனக்கென எவரும் இல்லை; அனாதை ஆகிட்டேன். பேரப்பிள்ளைகள் யாரும் வந்து பார்க்க மாட்டாங்க; எப்போதாவது பேசுவாங்க. குளித்து முடித்து, காலை 8:00 மணிக்கெல்லாம் இங்கு கடை போட வந்து விடுவேன். நன்றாக வியாபாரம் ஆகும் நாளில், 500 ரூபாய் வரை கிடைக்கும். மூன்று மாதத்திற்கு முன் ரோட்டை கடந்தபோது, ஒரு பைக் வேகமாக வந்து என்னை அடித்து விட்டு நிற்காமல் போய் விட்டது. தலையில் பெரிய அடி. எல்லாரும் வந்து துாக்கி ஜி.எச்.,சுல சேர்த்தனர்.அப்போது கடையில் கிட்டத்தட்ட, 7,000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி போட்டிருந்தேன்; எல்லாத்தையும் திருடிட்டு போயிட்டாங்க. எங்க வீட்டு ஓனரும், அவங்க பையனும் தான் மருந்து, மாத்திரைக்கு செலவு பண்ணினாங்க; 13,000 ரூபாய் ஆச்சு. 3,000 ரூபாய் கொடுத்துட்டேன்; மீதியை கொடுக்கணும். 10 மாசமா வாடகை வேற கொடுக்கல. கொஞ்சம் கொஞ்சமா உழைச்சு, எல்லாத்தையும் அடைக்கணும்; ஆனா, உதவத் தான் யாரும் இல்லை. கடந்த சில மாதங்களாக, வருமானம் எதுவும் இன்றி, ஜி.எச்.,சில் யாராவது அன்னதானம் போடும்போது போய் சாப்பிட்டு கொள்கிறேன். கடைக்கு கொஞ்சம் பொருட்கள் வாங்கி போட்டேன் எனில், பழையபடி வருமானம் வரும். இப்ப கூட, ஆப்பரேஷன் தியேட்டர்ல நோயாளிக்கு தேவைப்படும் துணி இருக்கா, அது இருக்கா, இது இருக்கான்னு கேட்டுட்டு போறாங்க. இல்லைன்னு சொல்லும்போது மனசு ரொம்ப வலிக்குது. இப்படியேவா வாழ்க்கை போயிடும்... எப்படியும் வழி பொறக்கும்.தொடர்புக்கு: 90927 73507.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ