கட்சிக்காக நான் தியாகம் செய்துள்ளேன் துணை முதல்வர் சிவகுமார் உருக்கம்
பெலகாவி: “ஆரம்பத்தில் இருந்தே கட்சிக்காக, நான் பல தியாகங்களை செய்தேன்,” என, துணை முதல்வர் சிவகுமார் உருக்கமாக தெரிவித்தார்.பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:தொண்டர்களை காப்பதே, என் முதல் கடமை. என் பணியை நான் செய்து வருகிறேன். யாரோ கூறிய பொய்களை ஊடகத்தினர் நம்பாதீர்கள். 'சிவகுமார் அவரை சந்தித்தார், இவரை சந்தித்தார், காங்கிரசில் அதிருப்தி நிலவுகிறது' என, செய்தி வெளியிடாதீர்கள்.எங்கள் கட்சியில் எந்த அதிருப்தியும் இல்லை. யாருடனும் எனக்கு தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு இல்லை. நான் அனைவரையும் சமமாக பார்க்கும் தலைவன் இடத்தில் இருக்கிறேன். எனக்கு அனைவரும் ஒன்றுதான். அனைவரையும் சமமாக அழைத்துச் செல்வது என் கடமை.எனக்கு யாருடனும் கருத்து வேறுபாடு இல்லை. கட்சியை காப்பாற்றுவது, அரசை தக்கவைத்துக் கொள்வது என் கடமை. மாநில காங்., பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை மாற்ற வேண்டும் என, சில அமைச்சர்கள் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலிடம் புகார் அளித்ததாக கூறுவது உண்மை இல்லை.நான் நேற்று முன்தினம் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் வீட்டுக்கு சென்றிருந்தேன். ஆனால் அவர்களை நான் சமாதானம் செய்ய சென்றதாக ஊடகத்தினர் புதிய கதையை உருவாக்கியுள்ளனர். பெலகாவியில் காங்கிரஸ் மாநாடு குறித்து ஆலோசிக்க, மாவட்ட தலைவருடன் நான் அவர்களை சந்தித்தேன்.ஆரம்பத்தில் இருந்தே கட்சிக்காக, நான் பல தியாகங்களை செய்தேன். தரம்சிங் தலைமையில் கூட்டணி அரசு, சித்தராமையா தலைமையிலான முந்தைய அரசு காலத்தில், உயிரை கையில் பிடித்துக் கொண்டு, கட்சிக்காக உழைத்தவன். எனக்கு கட்சி முக்கியம். கட்சியால் நான் வளர்ந்தேன்.யாருடைய பேச்சையும் ஊடகத்தினர் கேட்காதீர்கள். நான் தொடர்ந்து தியாகம் செய்வேன். பலன் எனக்கு அவசியம் இல்லை. மக்களுக்கு நல்லது நடந்தால் அதுவே எனக்கு போதும்.பெலகாவியில் இன்று 'காந்தி பாரத்' மாநாடு நடக்கவுள்ளது. இதில் டில்லி உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தலைவர்கள் பங்கேற்பர். பிரியங்காவும் வருகிறார். காந்தி, அம்பேத்கரை நினைவுகூர்வது எங்கள் குறிக்கோள்.இவ்வாறு அவர் கூறினார்.