உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திறன் மேம்பாடு, இரட்டை பட்டப்படிப்பை ஊக்குவிக்க சென்னை ஐ.ஐ.டி., - ஜெர்மனி பல்கலை ஒப்பந்தம்

திறன் மேம்பாடு, இரட்டை பட்டப்படிப்பை ஊக்குவிக்க சென்னை ஐ.ஐ.டி., - ஜெர்மனி பல்கலை ஒப்பந்தம்

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி உடனான ஜெர்மன் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் சந்திப்பின்போது, திறன் மேம்பாடு மற்றும் தொழில்கல்வியில் இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டது. இரு நாட்டு மாணவர்களின் இரட்டை பட்டப்படிப்பு திட்டத்துக்காக சென்னை - ஐ.ஐ.டி., - டிரெஸ்டென் பல்கலை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

சீர்திருத்தம்

ஐரோப்பிய நாடான ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ், மூன்று நாள் அரசு முறைப்பயணமாக டில்லி வந்துள்ளார். நேற்று நடந்த, இந்தியா - ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான 7வது ஆலோசனைக் கூட்டத்தில் இருதலைவர்களும் பங்கேற்று பேசினர். அப்போது மோடி கூறியதாவது:உக்ரைன் மற்றும் மேற்காசியாவில் நடக்கும் மோதல்கள் மிகுந்த கவலை அளிக்கிறது. போர் எதற்கும் தீர்வு அல்ல என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. அந்நாடுகளில் அமைதி திரும்ப அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். பசுமை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இந்தியாவும், ஜெர்மனியும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. இந்த உறவை மேலும் முன்னோக்கி எடுத்து செல்ல, பசுமை நகர்ப்புற போக்குவரத்து கூட்டாண்மையின் இரண்டாம் கட்டத்தை முன்னெடுக்க ஒப்புக் கொண்டு உள்ளோம். இருபதாம் நுாற்றாண்டில் நிறுவப்பட்ட உலகளாவிய மன்றங்கள், 21-ம் நுாற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள போதுமானதாக இல்லை. எனவே, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் தேவை என்பதை ஒலாப் ஸ்கால்சும் ஒப்புக்கொண்டுள்ளார்.

நம்பிக்கை

இந்தியா - ஜெர்மனி உறவில், மக்களுக்கு இடையிலான நல்லுறவு முக்கிய துாணாக உள்ளது. எனவே, திறன் மேம்பாடு, தொழிற்கல்வியில் இணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது.இருநாட்டு மாணவர்களின் இரட்டை பட்டப்படிப்பு திட்டத்தை ஊக்குவிக்க, சென்னை - ஐ.ஐ.டி., - ஜெர்மனியின் டிரெஸ்டென் பல்கலை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இந்தியாவின் இளம் திறமைகள் ஜெர்மனியின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கிறது. இந்தியாவுக்காக ஜெர்மனி வெளியிட்டுள்ள திறன் படைத்த தொழிலாளர்களுக்கான திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஜெர்மனியின் வளர்ச்சிக்கு பங்களிப்பு தருவதற்கான சிறந்த வாய்ப்புகளை எங்கள் இளைஞர்கள் பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பரஸ்பர சட்ட உதவி

இந்த சந்திப்பின் போது மொத்தம் 18 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில், குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் மற்றும் வகைப்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.பாதுகாப்பு துறைகளில் இருநாடுகள் இடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு வளர்ந்து வரும் நேரத்தில், தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் புதிய கதவுகளை திறந்துள்ளன. பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத அமைப்புகளை எதிர்த்து போராடும் இருநாடுகளின் கூட்டு முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி