உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசத்தினர் சட்டவிரோத ஊடுருவல்; ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை சோதனை

வங்கதேசத்தினர் சட்டவிரோத ஊடுருவல்; ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை சோதனை

ராஞ்சி : வங்கதேசத்தினரின் சட்டவிரோத ஊடுருவல் குறித்த விஷயத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, ஜார்க்கண்டின் பல்வேறு பகுதிகளில் அமலாக்க துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், போலி ஆதார் அட்டைகள், ஆயுதங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

சட்டவிரோத ஊடுருவல்

இம்மாநில சட்டசபைக்கு இன்றும், வரும் 20ம் தேதியும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் சட்டவிரோத ஊடுருவல் அதிகரித்து இருப்பதாகவும், அவர்கள் பழங்குடியினரின் நிலங்களை அபகரிப்பதாகவும் பா.ஜ., குற்றஞ்சாட்டி வருகிறது.இதனால், சந்தால் பர்கானா மற்றும் கோல்ஹான் மாவட்டங்களில் பழங்குடியினரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக, தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். மாநில அரசின் ஆதரவுடன் இந்த சட்டவிரோத ஊடுருவல் நடப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஊடுருவல்காரர்களை கண்டறிந்து அவர்கள் அபகரித்த நிலங்களை மீட்க சிறப்பு குழு அமைக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் தெரிவித்தார்.வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவிய பெண், ராஞ்சியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அழகு நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவித்து இருந்தார்.

பணப்பரிமாற்றம்

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஆறு பெண்களை போலீசார் கைது செய்தனர். அதில் ஒருவரிடம் இருந்து போலி ஆதார் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சட்டவிரோத ஊடுருவல் மற்றும் ஆள் கடத்தல் தொடர்பாக, பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இதில் சம்பந்தப்பட்ட பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்க துறையினர் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 17 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், போலி ஆதார் அட்டைகள், ஆயுதங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஜார்க்கண்டின் 43 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், அமலாக்கத்துறை சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'பா.ஜ.,வுக்காக நடந்த சோதனை'

இந்த சோதனை குறித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செய்தி தொடர்பாளர் மனோஜ் பாண்டே கூறியதாவது: ஜார்க்கண்டில் சட்டவிரோத ஊடுருவல் நடப்பதாக பா.ஜ., கூறிவரும் கட்டுக்கதைகளை நிறுவவும், தேர்தலில் மக்களை திசை திருப்பி பா.ஜ.,வுக்கு உதவும் நோக்கிலேயே, முதல்கட்ட தேர்தலுக்கு முந்தைய நாள் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதை மக்கள் நம்ப மாட்டார்கள்; தேர்தலில் தகுந்த பதிலடி தருவர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mohan
நவ 13, 2024 09:24

பேசாம இந்தியாவை இரண்டாக்கி ஒரு பாதி பாகிஸ்தானுக்கும், இன்னொரு பாதி பங்கடேஷுக்கும் கொடுத்துவிட்டால் பிரச்சனை முடிந்தது ..நான் மோடி ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் தடுக்கப்படும்னு நினைத்தேன் இவர்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்ல என்பது போல் தோன்றுகிறது


RAMAKRISHNAN NATESAN
நவ 13, 2024 06:41

வங்கதேசத்தினர் ஊடுருவல் நாற்பது ஆண்டுகளாக நடக்கிறது ..... இரண்டாவது தலைமுறையினர் இந்தியர்களுடன் இரண்டறக் கலந்து விட்டனர் ..... இதுவரை தூங்கிய பாஜக இதில் இப்போது நாடகமாடுகிறது ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை