உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் அதிரடி மடாதிபதியிடம் ஆலோசிக்க அறிவுரை

விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் அதிரடி மடாதிபதியிடம் ஆலோசிக்க அறிவுரை

தார்வாட்,: விவாகரத்து கேட்ட தம்பதிக்கு புத்திமதி கூறிய நீதிமன்றம், அவர்களை கவி சித்தேஸ்வரா மடத்தின் சுவாமிகளை சந்தித்து, ஆலோசனை நடத்தும்படி கூறியது. இது, வரலாற்றில் முதன் முறை என வல்லுனர்கள் கூறுகின்றனர்.கதக்கில் வசிக்கும் தம்பதிக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. மனைவி எம்.காம்., பட்டதாரி. கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்; தற்போது ஒர்க் பிரம் ஹோமில் இருக்கிறார். இவர்களுக்குள் சிறு விஷயத்துக்கும் அடிக்கடி சண்டை வந்தது. எனவே, பரஸ்பரம் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர்.விவாகரத்து கேட்டு உயர் நீதிமன்றத்தின் தார்வாட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மாதம் 17ம் தேதி, நீதிபதி ஸ்ரீகிருஷ்ண தீக்ஷித் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது.

புத்திமதி

தம்பதி இடையே இருந்த பிரச்னைகளை கேட்டறிந்த நீதிபதி, 'தாம்பத்யத்தில் பிரச்னைகள் வருவது சகஜம். கணவன், மனைவி இடையே சண்டை நடப்பது பெரிய விஷயமல்ல. சிறு சிறு விஷயத்துக்கும் சண்டை போட்டு விலகிச் சென்று, வாழ்க்கையை பாழாக்கி கொள்ளாதீர்கள்; ஒன்றாக அமர்ந்து பேசி, பிரச்னைகளை சரி செய்து கொள்ளுங்கள்.'விவாகரத்து என்றால் கடையில் வாங்கும் பொருள் அல்ல. பரஸ்பரம் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். சட்டத்தால் வாழ்க்கை நடத்த முடியாது. உங்களுக்கு பிரச்னைகள் இருந்தால், யாராவது மடாதிபதியை சந்தித்து ஆலோசனை பெற்று, பிரச்னையை தீர்த்து கொள்ளுங்கள்' என ஆலோசனை கூறினார்.அப்போது கணவர், 'கதக்கின் தோண்டதார்ய மடத்தின் சுவாமிகளை சந்திக்கிறேன்' என்றார். ஆனால் மனைவி, 'நான் கொப்பாலின் கவி சித்தேஸ்வர சுவாமிகளிடம் செல்வேன்' என்றார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 'நல்லது தான். கவி சித்தேஸ்வர சுவாமிகள் பெரிய மகான்; ஞானம் உள்ளவர். நானும் அவரது சொற்பொழிவுகளை கேட்டிருக்கிறேன். அவர் விவேகானந்தர் போன்றவர். நீங்கள் அவரிடம் சென்று ஆலோசனை பெற்று, புதிய வாழ்க்கையை துவக்குங்கள்' என கூறினார்.

தனித்தனி

அதன்படி, தம்பதி கவி சித்தேஸ்வரா மடத்துக்கு சென்றனர். ஆனால் சேர்ந்து செல்லாமல், தனித்தனியாக சென்றனர். நேற்று முன்தினம் மனைவி, மடத்துக்கு சென்றார். நேற்று கணவரின் குடும்பத்தினர், கவி சித்தேஸ்வரா மடத்துக்கு சென்று, அபினவ சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர். சுவாமிகள் 20 நிமிடங்கள் வரை, கணவரின் குடும்பத்தினருடன் பேசி அறிவுரை வழங்கினார்.விவாகரத்து கோரிய தம்பதியை, மடத்துக்கு சென்று ஆலோசனை பெறும்படி நீதிபதி கூறியது, வரலாற்றில் முதன் முறை என, பலரும் கூறுகின்றனர்.கர்நாடகாவின் பழமையான மடங்களில், கவி சித்தேஸ்வரா மடமும் ஒன்றாகும். 800 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இதுவும் லிங்காயத் மடங்களில் ஒன்று.

மகிழ்ச்சி

மடத்தின் பக்தர் சிவானந்த பாட்டீல் கூறியதாவது:தங்கள் பிரச்னைகளை சரி செய்து கொள்ள, மடாதிபதிகளை சந்திப்பது சரியான முடிவு. மடத்தின் வரலாற்றில் நீதிமன்றமே, மடாதிபதியிடம் ஆலோசனை பெறும்படி கூறியது, இதுவே முதன் முறையாகும். மடாதிபதியின் வழிகாட்டுதலை பின்பற்றினால், நீதிமன்றங்கள் மீதான அழுத்தத்தை குறைக்கலாம். மக்களும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தலாம்.பலரும் தங்கள் பிரச்னைகளை தீர்க்க, சுவாமிகளை சந்திப்பர். ஆனால், தாம்பத்ய வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டால், வழிகாட்டுதல் பெற மடாதிபதிகளிடம் வருவதில்லை.நேரடியாக நீதிமன்றத்துக்கு சென்று, விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை