உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகளாவிய திறமை தளமாக இந்தியா மாறும்: வேவ்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை

உலகளாவிய திறமை தளமாக இந்தியா மாறும்: வேவ்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை

மும்பை: “திரைப்பட தயாரிப்பு, டிஜிட்டல் உள்ளடக்கம், 'கேமிங், பேஷன்'மற்றும் இசை, நேரடி இசை நிகழ்ச்சிகளுக்கான சர்வதேச மையமாக இந்தியா வளர்ந்து வரும் நேரத்தில், 'வேவ்ஸ்' ஒரு உலகளாவிய திறமை தளமாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆற்றல்

ஊடகம், பொழுதுபோக்கு மற்றும், 'டிஜிட்டல்' கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்க, 'வேவ்ஸ்' எனப்படும், உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு மாநாடு மஹாராஷ்டிராவின் மும்பையில் நேற்று துவங்கியது.உலகெங்கிலும் உள்ள படைப்பாளிகள், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை இந்த மாநாடு ஒரு புள்ளியில் இணைத்துள்ளது.மாநாட்டை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களை பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் வரவேற்றார். நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், அனில் கபூர், ஹேமமாலினி, அனுபம் கேர், இயக்குநர் ராஜமவுலி உட்பட பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.இதில் பிரதமர் மோடி பேசியதாவது:திரைப்பட தயாரிப்பு, 'டிஜிட்டல்' உள்ளடக்கம், கேமிங், பேஷன், இசை மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளுக்கான சர்வதேச மையமாக இந்தியா வளர்ந்து வரும் நேரத்தில், 'வேவ்ஸ்' ஒரு உலகளாவிய திறமை தளமாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

சரியான நேரம்

'உலகிற்காக உருவாக்கு; இந்தியாவில் உருவாக்கு' என்பதை நிறைவேற்ற இதுவே சரியான நேரம். கதை சொல்லலில் பல புதிய பரிமாணங்களை உலகம் எதிர்நோக்கி உள்ளது. அதை நம்மால் வழங்க முடியும். 'ரோபோ'க்களை உருவாக்குவது நம் நோக்கம் அல்ல. உயர்ந்த உணர்திறன், உணர்ச்சி ஆழம், அறிவுசார் செழுமை உடைய மனிதர்களை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடி சாதிப்பார்: ரஜினிகாந்த் வாக்குறுதி

மாநாட்டில், நடிகர் ரஜினி காந்த் பேசியதாவது:ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் காட்டுமிராண்டித்தனமான கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இந்த நேரத்தில், 'வேவ்ஸ்' மாநாடு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக சிலர் என்னிடம் தெரிவித்தனர். ஆனால், பிரதமர் மோடி இந்த மாநாட்டை நிச்சயம் நடத்துவார் என்ற நம்பிக்கை இருந்தது. அவர் ஒரு போராளி. எந்த சவாலையும் அவர் எதிர்கொள்வார் என்பதை, கடந்த 10 ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்ப தேவையான நடவடிக்கையை பிரதமர் மோடி எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை