வெளிநாட்டில் பதுங்கியிருந்த இந்திய தாதாக்கள் கைது
புதுடில்லி: நம் நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று, அங்கிருந்தபடி கூலிப்படையினரை இயக்கி வந்த இரு தாதாக்களை, சர்வதேச போலீசார் உதவியுடன் நம் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி ஒருவர், கடந்த ஜனவரியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இந்தக் கொலையை செய்தது வெங்கடேஷ் கர்க் எனும் தாதா என குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். கிழக்கு ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவில் பதுங்கி இருந்தபடி, டில்லி, ஹரியானா, ராஜஸ்தானில் கூலிப்படையினரை பணிக்கு அமர்த்தி, குற்றச்செயல்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அதில் ஒரு கும்பலை, அக்டோபரில் டில்லி போலீசார் கைது செய்தனர். அவர்கள் வெங்கடேஷ் கார்க்கிற்காக ஆட்களை கடத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி, ஜார்ஜியாவில் பதுங்கியிருந்த வெங்கடேஷ் கைது செய்யப்பட்டார். இதேபோல், அமெரிக்காவில் பதுங்கியிருந்த பானு ரானா என்ற தாதாவையும் நம் போலீசார் கைது செய்தனர். இவர் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்த ஆட்களை அனுப்பிய நிழலுலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்பு உடையவர். ஹரி யானாவின் கர்னால் பகுதியைச் சேர்ந்த இவர் பஞ்சாப், ஹரியானா, டில்லி ஆகிய மாநிலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர்கள் இருவரையும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கை துவங்கி உள்ளது. நம் நாட்டில் தேடப்படும், 20க்கும் மேற்பட்ட தாதாக்கள் தப்பிச் சென்று வெளிநாடுகளில் பதுங்கியபடி குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்களை கைது செய்யும் முயற்சி தீவிரமாக நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.