உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர் கப்பலால் பாகிஸ்தானுக்கு... துாக்கமில்லா இரவு! வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் புகழாரம்

ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர் கப்பலால் பாகிஸ்தானுக்கு... துாக்கமில்லா இரவு! வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பனாஜி: “ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, நம் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., விக்ராந்த், பாகிஸ்தானுக்கு துாக்கமில்லா இரவுகளை தந்தது,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கடற்படை வீரர்களுடன் நேற்று தீபாவளி பண்டிகையை கொண்டாடிய அவர், ஐ.என்.எஸ்., விக்ராந்தின் பெருமைகளை எடுத்துரைத்தார். பிரதமர் நரேந்திர மோடி, நம் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தாண்டு, கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர் கப்பலில், நம் கடற்படை வீரர்களுடன் அவர் தீபாவளி திருநாளை கொண்டாடினார். துணிச்சல் இதற்காக, நேற்று முன்தினம், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விக்ராந்த் கப்பலுக்கு வந்த மோடி, அவர்களின் சாகச நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். விமானம் தாங்கி கப்பலில் இருந்து போர் கப்பல்கள் புறப்படுவதையும், தரை இறங்குவதையும் ஆர்வமுடன் அவர் கண்டு வியந்தார். பின், வீரர்களின் கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தார். போர் கப்பலிலேயே இரவு தங்கிய மோடி, நேற்று கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்த பிரதமர், அவர்கள் மத்தியில் பேசிய தாவது: இன்று ஓர் அற்புதமான நாள். ஒரு பக்கத்தில் கடல் உள்ளது. மறுபக்கத்தில், நம் இந்திய தாயின் துணிச்சலான வீரர்களின் பலம் உள்ளது. ஒரு பக்கம் எல்லையற்ற எல்லைகள் உள்ளன. மறுபக்கம், எல்லையற்ற சக்திகளை உள்ளடக்கிய மாபெரும் ஐ.என்.எஸ்., விக்ராந்த் உள்ளது. சூரிய கதிர்களால் கடல் நீரில் ஏற்படும் பிரகாசம், நம் துணிச்சலான வீரர்களால் ஏற்றி வைக்கப்படும் தீபாவளி விளக்குகளால் ஏற்பட்டுள்ளது. இந்த முறை, கடற்படையின் துணிச்சலான வீரர்கள் மத்தியில் தீபாவளி கொண்டாடுவதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். ஐ.என்.எஸ்., விக்ராந்தில் முந்தைய இரவை நான் கழித்த நினைவுகளை விவரிக்க கடினமாக உள்ளது. அபரிமிதமான ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் வீரர்கள் இருப்பதை கண்டேன். நீங்கள் தேச பக்தி பாடல்கள் பாடுவதையும், உங்கள் நிகழ்ச்சிகள் வாயிலாக ஆப்பரேஷன் சிந்துாரை விவரிப்பதையும் பார்த்தபோது, போர்க்களத்தில் நிற்கும் போது, ஒரு சிப்பாய் என்ன உணர்கிறார் என்பதை எந்த வார்த்தையாலும் கூற முடியாது என்பதை உணர்ந்தேன். இந்த பெரிய கப்பல், காற்றை விட வேகமாக சீறிப்பாயும் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவை ஆச்சர்யமாக தெரிகின்றன. ஆனால், அவற்றை உண்மையிலேயே வலிமையானதாக மாற்றுவது, அவற்றை இயக்கும் தைரியமிக்க நீங்கள் தான். ஒருங்கிணைப்பு இந்தக் கப்பல்கள் இரும்பால் ஆனதாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அவற்றில் ஏறும்போது, அவை ஆயுதப் படைகளின் உயிருள்ள சுவாசிக்கும் படைகளாக மாறுகின்றன. உங்களிடம் இருந்து கடின உழைப்பு, தவம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை நான் கற்றுக் கொண்டேன். இந்த வாழ்க்கையை வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர் கப்பலில் இருந்து வீரர்களான உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நாட்டு மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாட விரும்புகின்றனர். என் குடும்பமாக கருதும் உங்களுடன் நான் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக்கி கொண்டேன். சில மாதங்களுக்கு முன், விக்ராந்த் என்ற பெயர் பாகிஸ்தான் முழுதும் அச்ச அலைகளை ஏற்படுத்தின. அங்குள்ளவர்களுக்கு துாக்கமில்லா இரவுகளை தந்தன. அதன் வலிமை அப்படிப்பட்டது. போர் துவங்குவதற்கு முன், எதிரியின் தைரியத்தை உடைக்கும் பெயர் பெற்றது, ஐ.என்.எஸ்., விக்ராந்த். நம் கடற்படையால் உருவாக்கப்பட்ட பயம், விமானப் படையால் வெளிப்படுத்தப்பட்ட அசாதாரண திறமை, நம் ராணுவத்தின் துணிச்சல் என முப்படைகளின் ஒருங்கிணைப்பு, ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை பாக்.,கை விரைவில் சரணடைய கட்டாயப்படுத்தின. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை