பூனை மீது அக்கறை காட்டும் கணவர் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
பெங்களூரு: பூனையை காரணம் காட்டி, கணவர் மீது மனைவி தொடர்ந்த வரதட்சணை புகார் மீதான விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.நீதிமன்றங்களில் தினமும் பல விசித்திரமான வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. இந்த வரிசையில், உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.ஒரு கணவர் தாக்கல் செய்திருந்த மனுவில், 'நானும், என் பெற்றோரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, போலீசில் என் மனைவி புகார் அளித்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.இவ்வழக்கு விசாரணை, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடந்தது.நீதிபதி கூறியதாவது:இவ்வழக்கில் கணவர் மீது மனைவி அளித்திருந்த வரதட்சணை கொடுமை புகாரில், அவர்கள் வீட்டில் உள்ள செல்லப் பிராணியான பூனை தொடர்பாக, இருவரிடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இப்பூனை பற்றி, புகாரின் ஒவ்வொரு பாராவிலும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.பூனையால், அப்பெண்ணுக்கு பல முறை கீறல்கள் உட்பட பல தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளன. இதை வரதட்சணை கொடுமையாக கருத முடியாது. எனவே, குற்றம் சாட்டப்பட்டோர் மீது 498 'ஏ' பிரிவின் கீழ் விசாரணை நடத்த முடியாது. இதுபோன்ற சில வழக்குகளால் தான், மற்ற வழக்கு விசாரணைகளில் தொய்வு ஏற்படுகிறது.இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றால், நிலுவையில் உள்ள வழக்கில் ஒரு வழக்கு அதிகரிக்கும். எனவே, குற்றம் சாட்டப்பட்டோர் மீது விசாரணை நடத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. புகார் அளித்த பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.