உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் சர்வதேச ஆயுத கடத்தல் கும்பல்...  பிடிபட்டது!: பாக்., உளவு அமைப்பு உடனான தொடர்பு அம்பலம்

டில்லியில் சர்வதேச ஆயுத கடத்தல் கும்பல்...  பிடிபட்டது!: பாக்., உளவு அமைப்பு உடனான தொடர்பு அம்பலம்

புதுடில்லி: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்புடைய நான்கு பேர் அடங்கிய சர்வதேச ஆயுத கடத்தல் கும்பலை, டில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, 10 வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், பாகிஸ்தானில் இருந்து நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக சப்ளை செய்யப்படுவதாக டில்லி போலீசாருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பஞ்சாபில் செயல்படும் சமூக விரோத கும்பலான சோனு காத்ரியுடன் தொடர்புடைய மன்தீப் என்பவரை, கடந்த 19ம் தேதி போலீசார் கைது செய்தனர். இவர், பாகிஸ்தானில் உள்ள நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததும், அங்கிருந்து நம் நாட்டிற்குள் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கைது டில்லி ரோஹிணி பகுதியில் ஆயுதக் கடத்தல் நடக்கவிருப்பதாக மன்தீப் தகவல் அளித்தார். அங்கு பல மணிநேரம் காத்திருந்த போலீசார், மேலும் மூன்று பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இது குறித்து, டில்லி போலீஸ் இணை கமிஷனர் சுரேந்திர குமார் நேற்று கூறியதாவது: சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து பஞ்சாப் வழியாக ஆயுதக் கடத்தல் நடப்பதாகவும், அவை டில்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வினியோகிக்கப்படுவதாகவும் கைதான மன்தீப் தகவல் தந்தார். இதைத் தொடர்ந்து ரோஹிணி பகுதியில் காரில் வந்து ஆயுத வினியோகத்தில் ஈடுபட முயன்ற அஜய், தல்வீந்தர், ரோஹன் ஆகியோரை கைது செய்தோம். அவர்களிடம் இருந்து, 10 உயர் ரக தானியங்கி கை துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன; 92 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில், சீனாவில் தயாரிக்கப்பட்ட, 'பி.எக்ஸ்., - 3' மற்றும் துருக்கியில் தயாரிக்கப்பட்ட, 'பி.எக்ஸ்., - 5.7' ஆகிய ரகங்கள் அடங்கும். 'பி.எக்ஸ்., - 5.7' ரக துப்பாக்கிகள் சிறப்பு ஆயுதப் படைகளால் மட்டுமே கையாளப்படும் திறன் உடையவை. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் இந்த துப்பாக்கிகள், பாகிஸ்தான் கொண்டு வரப்பட்டு, இங்குள்ள பஞ்சாப் எல்லைப் பகுதியில் ட்ரோன்கள் வாயிலாக வீசப்படுகின்றன. ஆயுத சப்ளை ஆயுத கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ள உள்ளூர் இளைஞர்கள், இந்த ஆயுதங்களை கைப்பற்றி, டில்லி, உ.பி., ஹரியானா, பஞ்சாப் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வினியோகம் செய்து வருகின்றனர். டில்லி, மும்பை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் செயல்படும் சமூக விரோத கும்பல்களுக்கு, கைதான நான்கு பேரும் ஆயுதங்கள் சப்ளை செய்துள்ளனர். மிகப்பெரிய அளவில் செயல்படும், இந்த வலையமைப்புக்கு அமெரிக்காவில் உள்ள ஆயுதக் குழு தலைவர் ஜம்சீத் என்பவரின் அமைப்பு ஆயுதங்கள் சப்ளை செய்ததும் அம்பலமாகி உள்ளது-. இவர், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு ஆயுத சப்ளை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருப்பவர். எனவே, டில்லியில் கைதான கும்பலுக்கும் ஐ.எஸ்.ஐ., அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த கும்பல், இதுவரை இந்தியாவில் எங்கெங்கு ஆயுதங்களை விற்றுள்ளனர் என்பது குறித்தும், எத்தனை ஆயுதங்களை வினியோகித்துள்ளனர் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி