ஆபாச அர்ச்சனைக்கு ஆளான பெண் அதிகாரியிடம் விசாரணை
ஷிவமொக்கா: மணல் கடத்தலை தடுக்க சென்று, ஆபாச அர்ச்சனைக்கு ஆளான பெண் அதிகாரியிடம், போலீசார் விசாரணை நடத்தினர்.ஷிவமொக்கா மாவட்ட கனிம வள அதிகாரி ஜோதி. இவர், கடந்த 10ம் தேதி இரவு பத்ராவதி சீகேபாகி பகுதியில் இருந்து, சட்டவிரோதமாக லாரியில் மணல் கடத்தப்படுவதை தடுக்க சென்றார். அப்போது அவரிடம் மொபைல் போனில் பேசிய ஒருவர், ஆபாசமாக பேசினார். அந்த நபர் பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சங்கமேஸ்வர் மகன் பசவேஸ் என்று கூறப்படுகிறது. ஆனால் எம்.எல்.ஏ.,வும், அவரது மகனும், இதை மறுத்து உள்ளனர்.ஜோதி அளித்த புகாரில், பத்ராவதி பழையநகர் போலீசார் நேற்று முன்தினம் மூன்று பேரை கைது செய்தனர். நேற்று காலை பத்ராவதி டி.எஸ்.பி., நாகராஜ் முன், ஜோதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். பின், கலெக்டர் அலுவலகம் சென்றார். கலெக்டர் குருதத் ஹெக்டேயை சந்தித்து அரை மணி நேரம் பேசினார்.சம்பவம் குறித்து விளக்கம் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த வழக்கில் இருந்து பசவேசை தப்பிக்க வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுவதாக, எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.