| ADDED : டிச 04, 2024 10:09 PM
விஜயவாடா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு மீதான வழக்கை விசாரித்த ஐ.பி.எஸ்., அதிகாரி, முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபுவின் முந்தைய ஆட்சியில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.250 கோடி ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த அவர், தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகி உள்ளார்.சந்திரபாபு மீதான வழக்கு உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளை சிஐடி தலைவராக இருந்த ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சய் விசாரித்து வந்தார்.இந்நிலையில் அவர், பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்புத்துறை ஏ.டி.ஜி.பி., ஆக இருந்த போது ரூ.1 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், டெண்டர் விதிகளை சஞ்சய் மீறினார். துறைக்கு தேவையான பொருட்களை, சரிவர பணிகளை செய்யாத நிறுவனத்திற்கு வழங்கினார்.எஸ்.சி., மற்றும் எஸ்.டி., விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக ரூ.1,19,04,000 பணத்தை இரு தவணைகளாக ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு வழங்கினார். ஆனால், அந்த நிறுவனம் கூறியிருந்த முகவரிக்கு சென்று பார்த்தால், அப்படி ஒரு நிறுவனம் செயல்படவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.இதனையடுத்து அந்த அறிக்கையை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர், சஞ்சயை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் அனுமதியின்றி எங்கும் செல்லக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.