உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 மாதங்களில் ஓய்வு பெற இருந்த நிலையில் ஐ.பி.எஸ்., பிரதாப் ரெட்டி திடீர் ராஜினாமா

3 மாதங்களில் ஓய்வு பெற இருந்த நிலையில் ஐ.பி.எஸ்., பிரதாப் ரெட்டி திடீர் ராஜினாமா

பெங்களூரு: மூன்று மாதங்களில் ஓய்வுபெற இருந்த நிலையில், கர்நாடகா ஐ.பி.எஸ்., அதிகாரி பிரதாப் ரெட்டி, திடீரென ராஜினாமா செய்துள்ளார்.கர்நாடகாவில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி.,யாக பணியாற்றியவர் பிரதாப் ரெட்டி. ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர். 1991ம் ஆண்டு ஐ.பி.எஸ்., குழுவை சேர்ந்தவர். ஹாசன் அரிசிகெரே ஏ.எஸ்.பி.,யாக பணியில் சேர்ந்தவர், பெங்களூரு போலீஸ் கமிஷனர், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., சைபர் பாதுகாப்பு இயக்குனர், பெங்களூரு சி.பி.ஐ., அலுவலகத்தின் பொறுப்பு இயக்குனர் உட்பட, பல்வேறு பொறுப்புகளை திறம்பட கையாண்டவர். நேர்மையான அதிகாரி என்றும் பெயர் எடுத்தவர்.சிறப்பான சேவைக்காக கர்நாடகா முதல்வர் விருது, ஜனாதிபதி விருதும் பெற்றவர். இவரது பதவிக்காலம், மே 31ம் தேதியுடன் முடிய இருந்தது.இந்நிலையில் ஐ.பி.எஸ்., பதவியில் இருந்து, பிரதாப் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை, கர்நாடகா தலைமை செயலர் ரஜ்னிஷ் கோயலுக்கு அனுப்பி வைத்துள்ளார். விருப்ப ஓய்வு பெற விரும்புவதாகவும், ஏப்ரல் 30ம் தேதிக்குள் பணியில் இருந்து, தன்னை விடுவிக்கும்படியும் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.தனிப்பட்ட காரணங்களுக்காக, பிரதாப் ரெட்டி ராஜினாமா செய்தார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரது ராஜினாமாவுக்கு பின்பு, இதன் பின்னணியில் கர்நாடகா டி.ஜி.பி., அலோக் மோகன் உள்ளார் என, தகவல் வெளியாகி உள்ளது.

டி.ஜி.பி., மீது புகார்

சமீபத்தில் பெங்களூரில் நடந்த வில்வித்தை போட்டியில், பிரதாப் ரெட்டி உட்பட 11 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் விளக்கம் கேட்டு, அலோக் மோகன் 'மெமோ' கொடுத்துள்ளார்.அலோக் மோகன் சர்வாதிகாரம் செய்வதாக, தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடம், பிரதாப் ரெட்டி கூறி உள்ளார். சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில், பதவிக்காலம் முடிவதற்கு முன்பே, ராஜினாமா செய்துவிட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.பிரதாப் ரெட்டி ராஜினாமா செய்ததால், கர்நாடகா அரசை, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் குற்றம் சாட்டி உள்ளார். 'பணம் கொடுக்கும் அதிகாரிகளுக்கு தான், கர்நாடகா அரசு மரியாதை கொடுக்கிறது. 'பிரதாப் ரெட்டி போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு, எந்த மதிப்பும் இல்லை' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை