கர்நாடகாவில் உள்ள, மாண்டியா சர்க்கரை மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு கரும்பு விளைச்சல் அதிகமாக உள்ளது. கடந்த 1952 முதல் 2019 வரை மாண்டியா லோக்சபா தொகுதி 21 தேர்தல்களை சந்தித்து உள்ளது. அதிகபட்சமாக காங்கிரஸ் 12 முறை இந்த தொகுதியை கைப்பற்றி உள்ளது.கடந்த 1998, 1999, 2004 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, நடிகர் அம்பரீஷ் வெற்றி பெற்று இருந்தார். அவரது மறைவுக்கு பின்னர் கடந்த 2019ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட அம்பரீஷ் மனைவியும், நடிகையுமான சுமலதா 'சீட்' எதிர்பார்த்தார். மாண்டியா மருமகள்
ஆனால், அப்போது காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணியில் இருந்ததால், சுமலதாவுக்கு 'சீட்' கொடுக்க காங்கிரஸ் மறுத்து விட்டது. இதனால், அவர் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு பா.ஜ., ஆதரவு கொடுத்தது. காங்., கூட்டணியில், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட்டார்.அந்த நேரத்தில் குமாரசாமி முதல்வராக இருந்ததால், மகன் வெற்றிக்காக சுமலதாவை பகைத்து கொண்டார். 'அம்பரீஷ் மரணம் அடைந்த பிறகு அவரது உடலை மாண்டியா கொண்டு வந்தேன். ஆனால் சுமலதா நன்றி மறந்து விட்டார்' என, குமாரசாமி வசைபாடினார்.அதே நேரத்தில், 'நான் மாண்டியாவின் மருமகள், உங்களிடம் மடிபிச்சை கேட்கிறேன்' என்று, சுமலதாவும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனால் குமாரசாமிக்கும், சுமலதாவுக்கும் இடையில் நீயா, நானா மோதல் ஏற்பட்டது. இறுதியில் சுமலதா வெற்றி பெற்று, குமாரசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். மகனை தோற்கடித்ததால் சுமலதா மீது, குமாரசாமி கோபத்தில் இருந்தார். மாண்டியா தொகுதிக்காக எதுவுமே செய்யவில்லை என்று, சுமலதாவை வசைபாடினார். காங்கிரசில் எதிர்ப்பு
இந்நிலையில், கடந்த தேர்தலில் தனக்கு ஆதரவு அளித்த, பா.ஜ.,வில் இணைய சுமலதா ஆர்வமாக இருந்தார். வரும் தேர்தலில் அவர் பா.ஜ., வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.இதற்கிடையில், பா.ஜ., - ம.ஜ.த., இடையில் கூட்டணி மலர்ந்து இருப்பதால், மாண்டியா தொகுதியை தங்களுக்கு தரும்படி ம.ஜ.த.,வினர் கேட்டு உள்ளனர். இதனால் சுமலதாவை தொகுதி மாறி போட்டியிட வைக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்து உள்ளது. ஆனால், 'எக்காரணம் கொண்டும் மாண்டியா தொகுதியை விட்டு தர மாட்டேன்' என்று, சுமலதா கூறி உள்ளார்.மாண்டியா தொகுதியில், சுமலதா மீண்டும் சுயேச்சையாக போட்டியிடுவார் என்று, அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அவரை காங்கிரசுக்கு இழுக்கும் முயற்சியும் நடக்கிறது. சுமலதாவை காங்கிரசுக்கு அழைத்து வர, காங்கிரசின் ஒரு கோஷ்டி ஆதரவும், ஒரு கோஷ்டி எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.இந்நிலையில், மாண்டியாவில் மீண்டும் சுயேச்சையாக போட்டியிடுவது குறித்து, ஆதரவாளர்களுடன், சுமலதா பேச்சு நடத்தி இருப்பதாகவும், மாண்டியாவை ம.ஜ.த.,வுக்கு கொடுக்க கூடாது என்று, பா.ஜ., மேலிட தலைவர்களை சந்தித்து, அவர் வலியுறுத்த இருப்பதாகவும் தகவல் வெளியானது. எது எப்படியோ, சுமலதா மீண்டும் சுயேச்சையாக போட்டியிட்டால், மாண்டியா தொகுதியில் மீண்டும் அனல் பறக்க போவது உறுதி.