யூனியன் கார்பைட் கழிவுகளால் ஆபத்தா? விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சியாளர்கள் தயார்
தார்: 'யூனியன் கார்பைட்' தொழிற்சாலை கழிவுகளை அழிப்பதால் ஆபத்து இல்லை என, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, முதல்கட்டமாக 50 பேருக்கு மாநில அரசு பயிற்சியை துவங்கியது.மத்திய பிரதேசத்தின் போபாலில் இருந்த, 'யூனியன் கார்பைட்' தொழிற்சாலையில், 1984, டிச., 23ம் தேதி இரவு விஷவாயு கசிவு ஏற்பட்டது. உடல் பாதிப்பு
காற்றில் கலந்த நச்சுக்காற்றை சுவாசித்ததால், 5,479 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் நிரந்தர உடல் பாதிப்புகளுக்கு ஆளாகினர்.இந்த யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் உள்ள 3,37,000 கிலோ நச்சுக் கழிவுகள் கடந்த 40 ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்தன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் கழிவுகளை அகற்றி அழிக்கும்படி கடந்த மாதம் உத்தரவிட்டது.இதை தொடர்ந்து பாதுகாப்பான, 12 கன்டெய்னர்களில் அடைக்கப்பட்ட கழிவுகள், போபாலில் இருந்து 250 கி.மீ., தொலைவில் உள்ள பீதாம்புர் என்ற இடத்துக்கு கடந்த 2ம் தேதி அகற்றப்பட்டன.தொழிற்சாலைகள் நிறைந்த அப்பகுதியில், கழிவுகளை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இது சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என, பீதாம்புரில் வசிப்போர் எதிர்ப்பு தெரிவித்தனர்.மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இரண்டு பேர் தீ குளிக்க முயன்றனர். இதை தொடர்ந்து, கழிவுகள் அபாயகரமானது அல்ல என, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அவகாசம் அளிக்கும்படி ம.பி., உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு கோரிக்கை விடுத்தது. விரிவான பயிற்சி
ஆறு வாரங்களுக்குள் கழிவுகளை தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகளுடன் அழிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை தொடர்ந்து, யூனியன் கார்பைட் கழிவுகள் அபாயகரமானது அல்ல என்றும், தகுந்த பாதுகாப்புடன் அவை அழிக்கப்படும் என, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முடிவு செய்தது.இதற்காக, 50 சிறந்த பயிற்சியாளர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இது குறித்து தார் மாவட்ட கலெக்டர் பிரியங்க் மிஸ்ரா கூறியதாவது:
அறிவியல் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பயிற்சியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டிய விழிப்புணர்வு குறித்து, அவர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதை அறிவியல் ரீதியாக புரிந்து கொண்டு, அவர்கள் மக்களிடம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவர். இன்று முதல் அந்த பணி துவங்கும். மேலும், 50 சிறந்த பயிற்சியாளர்கள் உருவாக்கப்பட்டு களப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.