உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் கோர விபத்துகள் 20 பேர் பலியான பரிதாபம்

உ.பி.,யில் கோர விபத்துகள் 20 பேர் பலியான பரிதாபம்

பிலிபித், உத்தர பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் சிக்கி, 20 பேர் பலியாகினர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.உத்தரகண்ட் மாநிலத்தில் காதிமா மாவட்டத்தின் ஜாமோர் கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் அடங்கிய குடும்பத்தினர், தங்கள் உறவினர் திருமணத்தில் பங்கேற்க உத்தர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தின் சண்டோய் கிராமத்திற்கு, 'மாருதி எர்டிகா' காரில் நேற்று முன்தினம் சென்றனர்.இந்த நிகழ்வில் பங்கேற்றபின், அதே காரில் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். பிலிபிட் - தானக்பூர் சாலையில் சென்றபோது, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல கார் டிரைவர் முயன்றார். எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி, அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்து கார் விபத்துக்குஉள்ளானது.தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினரின் உதவியுடன் காருக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், காரின் மீது மரம் விழுந்ததால், உள்ளே சிக்கியவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, புல்டோசர் உதவியுடன் மரத்தை அகற்றிய மீட்புக்குழுவினர், ஒன்றரை மணி நேரத்திற்குபின் காருக்குள் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேபோல் உத்தர பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்த 11 பேர், மறைந்த தங்கள் குடும்ப உறுப்பினரின் அஸ்தியை கரைக்க பிரயாக்ராஜிற்கு, 'மஹிந்திரா பொலீரோ' காரில் நேற்று முன்தினம் சென்றனர்.அதன்பின் தங்கள் சொந்த ஊருக்கு நேற்று அதிகாலை மீண்டும் திரும்பி சென்றனர்.அப்போது சித்ரகூடு அருகே சென்றபோது, ராய்புராவில் இருந்து வந்த லாரி மீது கார் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.இதில், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார் டிரைவர் துாங்கியதால் இந்த விபத்து நேர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.மற்றொரு சம்பவத்தில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து டில்லி நோக்கி ஏராளமான பயணியருடன் சொகுசு பஸ் ஒன்று நேற்று பிற்பகல் புறப்பட்டு சென்றது. ஆக்ரா - லக்னோ விரைவு சாலையின் சக்ராவா பகுதியில் அந்த பஸ் சென்றது. அப்போது, சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற, லாரி நிறுத்தப்பட்டிருந்தது.இதை டிரைவர் கவனிக்காததால், லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 12 பேர் காயமடைந்தனர். உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் நிகழ்ந்த மூன்று விபத்துகளில் மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ