உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பதற்றத்தை தணிப்பதே அடுத்த முன்னுரிமை சீனாவுடனான உறவு குறித்து ஜெய்சங்கர் விளக்கம்

பதற்றத்தை தணிப்பதே அடுத்த முன்னுரிமை சீனாவுடனான உறவு குறித்து ஜெய்சங்கர் விளக்கம்

புதுடில்லி, “எல்லையில் இருந்து படைகள் விலக்கி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா - சீனா இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை தணிப்பதே அடுத்த முன்னுரிமை,” என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் லோக்சபாவில் நேற்று தெரிவித்தார்.நம் நாட்டின் கிழக்கு லடாக் எல்லையில், 2020 மே மாதத்தில் சீன படைகள் அத்துமீறி நுழைய முயன்றன. இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டன.

முன்னேற்றம்

பல சுற்று பேச்சுக்குப் பின், படைகளை விலக்கிக் கொள்ள இருதரப்பும் முடிவு செய்தன. கடந்த அக்., 21ல், பார்லிமென்டில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதை அறிவித்தார். இதை சீனாவும் உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து, அக்., 23ல் ரஷ்யாவில் நடந்த 'பிரிக்ஸ்' மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேசினர். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டது.தற்போது, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தியா - சீனா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் லோக்சபாவில் நேற்று கூறியதாவது:இந்தியா - சீனா இடையேயான எல்லைகள் நிர்ணயிக்கப்படவில்லை. தற்போதைக்கு எல்.ஏ.சி., எனப்படும், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி மட்டுமே உள்ளது. இதிலும் சில இடங்களில் தெளிவு இல்லை.கடந்த 2020ல் இருந்து, எல்லையில் அமைதி இல்லாமல் பதற்றமான சூழ்நிலை இருந்தது. சீனப் படைகள் அத்துமீறியபோதும், நம் வீரர்கள் மிகவும் வீரத்துடன் எதிர்த்து நின்றனர். உரிய போக்குவரத்து வசதி இல்லாத நிலையிலும், கொரோனா தொற்று பரவல் இருந்தபோதும், நம் படைகள் சரியான நேரத்தில் சென்று அத்துமீறலை தடுத்து நிறுத்தின.இரு நாட்டுக்கும் இடையே பல கட்டங்களாக, பல நிலைகளில் நடத்தப்பட்ட பேச்சுக்குப் பின், எல்லையில் இருந்து படைகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து இருதரப்பு உறவில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுஉள்ளது. அடுத்தது, எல்லையில் பதற்றத்தை தணிப்பதுதான் நம் முன்னுரிமை.அதன்பிறகே, எல்லைப் பிரச்னைகள் தொடர்பாக சீனாவுடன் விவாதிக்க முடியும். எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.கடந்த 1962 மோதலுக்குப் பின், இந்திய எல்லைக்குட்பட்ட 38,000 சதுர கி.மீ., பரப்புள்ள 'அக்சாய் சின்' பகுதி சீனாவின் சட்டவிரோத கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ளது.

முழு முயற்சி

இதைத்தவிர, நம் அண்டை நாடான பாகிஸ்தான் தன் கட்டுப்பாட்டில் இருந்த 5,180 சதுர கி.மீ., பரப்புள்ள இந்திய நிலப்பகுதியை, சீனாவுக்கு 1963ல் வழங்கியது. கடந்த 1948ல் இருந்து இந்த இடங்கள் பாகிஸ்தானின் சட்டவிரோத கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளன.சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் பேச்சு நடத்தி, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு ஏற்படுத்துவதற்கான முழு முயற்சிகளும் நடக்கின்றன. நம் அனுபவத்தில், பேச்சுகளின் வாயிலாக, இந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

எல்லை பிரச்னைக்கு தீர்வு காண அமைச்சர்

ஜெய்சங்கர் வலியுறுத்திய மூன்று முக்கிய அம்சங்கள்:1 தற்போதுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியை, இரு நாடுகளும் மதித்து நடக்க வேண்டும்2 தற்போதுள்ள நிலையில், தன்னிச்சையாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது3 எல்லை தொடர்பாக இருதரப்புக்கும் இடையே முன்பு ஏற்படுத்திய உடன்பாடுகள், ஒப்பந்தங்களை முழுமையாக பின்பற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி