டெண்டர் இன்றி ரூ.10 லட்சம் செலவு செய்ய ஜல் போர்டு பொறியாளர்களுக்கு அதிகாரம்
புதுடில்லி: அவசரகால பணிகளுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை, 'டெண்டர்' கோராமல் செலவு செய்ய, மேற்பார்வை பராமரிப்புப் பொறியாளர்களுக்கு டில்லி ஜல் போர்டு அதிகாரம் அளித்து உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, டில்லி ஜல் போர்டு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவு: ஜல் போர்டில், 25 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கும் மேல் செலவு செய்ய வேண்டிய பணிகளுக்கு இணையதளத்தில் டெண்டர் கோர வேண்டும். இதுவே, 50 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கும் மேல் செலவு செய்ய வேண்டியிருந்தால் அந்த திட்டங்களுக்கு நாளிதழ்களில் விளம்பரம் செய்து டெண்டர் கோர வேண்டும். டெண்டர் முறைப்படி பரிசீலித்து முடிவு எடுக்கப்படும். ஆனால், சமீபகாலமாக அவசரமாக செய்து முடிக்க வேண்டிய பணிகள் கூட, இந்த விதிமுறைகளால் தாமதம் ஏற்பட்டு செய்ய முடியாத நிலையில் உள்ளன. எனவே, அவசரப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. அவசரமாக செய்து முடிக்க வேண்டிய பணிகள் 10 லட்சம் ரூபாய் வரை இருந்தால், அதற்கு டெண்டர் கோராமல் செய்ய, மேற்பார்வை பராமரிப்புப் பொறியாளர்களுக்கு அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. எனவே, அவசரமாக செய்ய வேண்டிய பணிகளுக்கு பொறியாளர்கள் 'ஸ்பாட் கொட்டேஷன்' என்ற விதிமுறையை பயன்படுத்தி, பணிகளை செய்து முடிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் உடைந்த குழாய்களை மாற்றுதல், உபகரணங்களின் வழக்கமான பராமரிப்பு மற்றும் சிறிய பணிகள் ஆகியவை, ஜல் போர்டின் இந்த உத்தரவால் இனி உடனுக்குடன் நடக்கும் என தெரிகிறது.