ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தல் 59 சதவீத ஓட்டுகள் பதிவாகின
ஜம்மு,ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்த நிலையில், கடந்த ஏழு தேர்தலில் இல்லாத அளவிற்கு 59 சதவீத ஓட்டுகள் பதிவானது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, 10 ஆண்டுகளுக்கு பின் அங்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. போட்டி
அதன்படி, ஏழு மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளுக்கு நேற்று முதற்கட்டமாக தேர்தல் நடந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 16 தொகுதிகளிலும், ஜம்முவில் உள்ள எட்டு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புக்கு நடுவே நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜ., மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்- - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. பல இடங்களில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் ஓட்டளித்தனர். காலை 11:00 மணி வரை மந்தமாக இருந்த ஓட்டுப்பதிவு, பிற்பகல் முதல் சூடுபிடித்தது. குறிப்பாக, இளைஞர்கள் அதிகளவில் வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் பல மணி நேரம் காத்திருந்து ஓட்டளித்தனர். மதியம் 1:00 மணி வரை 26 சதவீதமும், 3:00 மணி வரை 50 சதவீதம் ஓட்டு பதிவானது. இதையடுத்து, பல இடங்களில் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, சீலிடப்பட்ட மின்னணு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையத்துக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதன்மை தேர்தல் அதிகாரி பி.கே. போலே கூறியதாவது: முதற்கட்ட ஓட்டுப்பதிவு அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. ஒரு சில இடங்களில் கைகலப்பு, வாக்குவாதங்கள் அரங்கேறினாலும், குறிப்பிட்டு சொல்லும்படியான அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்த தேர்தலில் 59 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த புள்ளிவிபரம் மாறுபடவும் வாய்ப்புள்ளது. அதிகம்
கடந்த ஏழு தேர்தல்களில் பதிவான ஓட்டுப்பதிவை விட இது அதிகமாகும். அரசியல் கட்சிகளின் தீவிர பங்கேற்பு மற்றும் பாதுகாப்பு நிலை போன்றவையே காரணம். அதிகபட்சமாக கிஷ்துவார் மாவட்டத்தில் 77 சதவீத ஓட்டுகள் பதிவாகின. குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46 சதவீத ஓட்டுகள் பதிவாகின.இவ்வாறு அவர் கூறினார். ஜம்மு - காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக். 1ம் தேதியும் தேர்தல் நடக்க இருக்கின்றது. பதிவாகும் ஓட்டுகள் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.