அப்படி பெருசா எல்லாம் இல்ல! ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஓட்டுப்பதிவில் புது தகவல்
புதுடில்லி; 2014ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஜம்முகாஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டு போடும் ஆர்வம் மக்களிடம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.ஜம்முகாஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் பெரும் எதிர்பார்ப்புகளுடன் சட்டப்பேரவை தேர்தல் முதல் கட்ட ஓட்டுப்பதிவு செப்.18ம் தேதி நடைபெற்றது. 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இவற்றில் 16 தொகுதிகள் காஷ்மீர் பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்முவிலும் அமைந்துள்ளன.ராணுவ வீரர்களின் பலத்த பாதுகாப்புக்கு இடையே ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. 219 வேட்பாளர்கள் போட்டியிட்ட முதல் கட்ட தேர்தலில் ஒட்டுமொத்தமாக 61 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந் நிலையில், 2014ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஜம்முகாஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் தற்போது முதல்கட்ட ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு, தீவிரவாதிகள் தாக்குதல், மிரட்டல்களுக்கு இடையில் 66 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால் இப்போது குறைந்து 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.பம்போர் தொகுதியில் 2014ம் ஆண்டு 47 சதவீதம் இருந்த ஓட்டுப்பதிவு, 2024ம் ஆண்டில் 42 ஆக குறைந்துள்ளது. ராஜ்புரா தொகுதியில் 2014ம் ஆண்டு 47 சதவீதம் ஓட்டு பதிவானது. இப்போது 2 சதவீதம் குறைந்து 45 ஆக பதிவாகி இருக்கிறது.டிஹெச் போரா தொகுதியில் 2014ம் ஆண்டு 77 என்ற சதவீதம் தற்போது 65ஆக குறைந்துவிட்டது. தூரு தொகுதியில் 2014ம் ஆண்டு பதிவான 63 சதவீதம் என்ற ஓட்டுப்பதிவு இம்முறை 57 சதவீதமாக பதவாகி உள்ளது. ஷாங்கஸ் அனந்த்நாக் தொகுதியில் 2014ல் 67 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. ஆனால் இப்போது முடிந்த தேர்தலில் வெறும் 52 சதவீதம் ஓட்டுகளே பதிவாகி இருக்கிறது.