ஜெகன் மீது அடுத்த நடவடிக்கை அமலாக்கத்துறை வழக்கு பதிவு
ஐதராபாத் : ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி மீது, அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்ய உள்ளனர். ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கியுள்ளார். இவருக்கு, காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேச கட்சியைச் சேர்ந்த, 26 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தன்னுடைய தந்தை முதல்வராக இருந்த போது, அவரது செல்வாக்கை பயன்படுத்தி, ஜெகன்மோகன் ரெட்டி, பல நூறு கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதாக, ஆந்திர அமைச்சர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஜெகன் மோகன் சொத்து குறித்து விசாரிக்கும் படி, ஐகோர்ட், சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., ஜெகன் மோகனுக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்தியது. சென்னை, பெங்களூரு, கோல்கட்டா, ராஜ்கோட், டில்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக, ஜெகன் மோகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறையும், ஜெகன்மோகன் ரெட்டியின் வருவாய்க்கு அதிகமான சொத்து குறித்து, வழக்கு பதிவு செய்ய உள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.