ஜார்க்கண்ட் அமைச்சரவை விரிவாக்கம் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
ராஞ்சி,ஜார்க்கண்ட் அமைச்சர்களாக 11 பேர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். ஜார்க்கண்டில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஏற்கனவே ஆட்சியில் இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்றது. அந்த கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த 28ம் தேதி பதவியேற்றார். புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பான பட்டியல், கவர்னர் சந்தோஷ் குமார் கங்வாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, 11 எம்.எல்.ஏ.,க்கள் புதிய அமைச்சர்களாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு, கவர்னர் சந்தோஷ் குமார் கங்வார், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த சுதீவ்யா குமார், தீபக் பிருவா, ராம்தாஸ் சோரன், சாம்ரா லிண்டா, யோகேந்திர பிரசாத் மற்றும் ஹஜிபுல் ஹசன் ஆகியோர் பதவியேற்றனர். கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தீபிகா பாண்டே சிங், ஷில்பி நேஹா திர்கி, இர்பான் அன்சாரி, ராதாகிருஷ்ண கிஷோர் ஆகியோரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த சஞ்சய் பிரசாத் யாதவும் நேற்று பதவிஏற்றுக் கொண்டனர்.