உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கலபுரகி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு... ரூ.1,685 கோடி! கல்யாண கர்நாடகாவுக்கு அரசு சலுகை

கலபுரகி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு... ரூ.1,685 கோடி! கல்யாண கர்நாடகாவுக்கு அரசு சலுகை

கலபுரகி கல்யாண கர்நாடகா மண்டல மேம்பாட்டுக்கு, மாநில அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. கர்நாடக அரசு சார்பிலேயே, 1,685 கோடி ரூபாயில், கலபுரகி, 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.ஆந்திராவை ஒட்டியுள்ள கர்நாடகாவின் கலபுரகி, பீதர், ராய்ச்சூர், கொப்பால், யாத்கிர், பல்லாரி ஆகிய மாவட்டங்களுக்கு, சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 371 ஜே, 2012 செப்., 17ம் தேதி கொண்டு வரப்பட்டது. 2013 ஜனவரி 1ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார்.அந்த மாவட்டங்களை உள்ளடக்கி, ஹைதராபாத் கர்நாடகா என்று அழைக்கப்பட்டு வந்தது. 2019ல் கல்யாண கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

10 ஆண்டுகள்

அந்த பகுதி மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள் என்பதால், சிறப்பு அந்தஸ்து கீழ், வளர்ச்சி பணிகள், அரசு பணியில் இட ஒதுக்கீடு என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஹொஸ்பேட் மாவட்டமும் இதில் சேர்க்கப்பட்டது.இதற்கிடையில், ஆண்டுதோறும் சட்டப்பிரிவு 371 ஜே அறிவிக்கப்பட்ட செப்., 17ம் தேதி, கல்யாண கர்நாடகா உத்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், நேற்று கலபுரகியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.கலபுரகியில் கல்யாண கர்நாடக பகுதிகள் மேம்பாட்டுக்கு வித்திட்ட சர்தார் வல்லபாய் படேலுக்கு, முதல்வர் சித்தராமையா நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேசிய கொடி

பின், போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். திறந்த ஜீப்பில் சென்று போலீஸ், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.அதன் பின், முதல்வர் சித்தராமையா உரையாற்றியதாவது:கல்யாண கர்நாடகாவின் ஏழு மாவட்டங்களின், 18 தாலுகாக்களில் 130 கோடி ரூபாயில் மினி விதான் சவுதா கட்டப்படுகிறது. ராய்ச்சூர், பல்லாரியில் தாய்ப்பால் வங்கி அமைக்கப்படும்.கர்நாடக அரசு சார்பில், 1,685 கோடி ரூபாயில், கலபுரகி ஸ்மார்ட் நகரமாக மாற்றப்படும். இதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும். கலபுரகியின் நதிசினுார் ஹொன்னகிரனகி அருகில், 1,000 ஏக்கரில் மெகா ஜவளி பூங்கா அமைக்கப்படும்.கலபுரகியில் மாநிலத்திலேயே முதல்முறையாக, கணினி எண் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். 140 கோடி ரூபாயில், கலபுரகியின் சேடத்தில் யடள்ளி காசூர் மேலணை திட்டம் செயல்படுத்தப்படும்.மத்திய அரசின் பிரசாதா திட்டத்தின் கீழ், கலபுரகியின் தேவலகாணாபூரா கோவில் மேம்படுத்தப்படும்.

அனுபவ மண்டபம்

பசவ கல்யாணில் அனுபவ மண்டபத்தை கட்டி, அடுத்தாண்டு துவக்கி வைக்கப்படும். பசவண்ணரின் தத்துவங்கள் அடங்கிய அருங்காட்சியகம் அமைக்கப்படும். ராய்ச்சூரில் ஜவளி பூங்கா அமைக்கப்படும்.கல்யாண கர்நாடகா மேம்பாட்டு வாரியத்துக்கு, இதுவரை 19,778 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 13,229 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ராய்ச்சூரில் 25 கோடி ரூபாயில், புதிதாக மிளகாய் சந்தை அமைக்கப்படும். கொப்பாலின் யலபுர்கா, பல்லாரியில் 50 கோடி ரூபாயிலும்; ராய்ச்சூரில் 50 கோடி ரூபாயில் விவசாய கிடங்குகள் அமைக்கப்படும்.

1.09 லட்சம் பேர்

இப்பகுதி கல்வி நிறுவனங்களில், உள்ளூர் மக்களுக்கு 70 சதவீதம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பணியிடங்களில் 1,09,416 பேர் இட ஒதுக்கீடு மூலம் வேலை பெற்றுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளில், சுகாதார திட்டங்களுக்கு, 916 கோடி ரூபாய்; பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கு, 653 கோடி ரூபாய்; செலவிடப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி முதல், பல்கலைக்கழகம் வரை கல்வி தரம் உயர்த்துவதற்கு, 4,352 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.கல்யண கர்நாடகா வளர்ச்சிக்கு, ஆண்டுதோறும், 5,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இப்பகுதி குடிநீர் திட்டத்துக்கு, 8,290 கோடி ரூபாய் செலவிடப்படும். புதிதாக 1.50 லட்சம் வீடுகளுக்கு கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. மின் திட்டங்களுக்கு, 618 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.கல்யாண கர்நாடகா வளர்ச்சி அடையவில்லை என்றால், மாநிலம் வளர்ச்சி அடையாது. இப்பகுதி மக்களுக்கு, கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே அரசின் நோக்கம்.இவ்வாறு அவர் பேசினார்.துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். விழாவுக்கு பின், முதல்வர் சித்தராமையா பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ