பெங்களூரு: கர்நாடக மாநில பா.ஜ., மற்றும் காங்., தலைவர்கள் வெளி மாநிலங்களில், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதவராக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வறுத்தெடுக்கும் கோடை வெயிலுக்கு மத்தியில், வியர்க்க, விறுவிறுக்க ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.லோக்சபா தேர்தல், ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாக கர்நாடகாவில் நடந்து முடிந்தது. சிலர் குடும்பத்தினருடன் ஹாயாக காலம் கழிக்கின்றனர். தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்கின்றனர். பேரக் குழந்தைகளை கொஞ்சி மகிழ்கின்றனர். விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். பிடித்த உணவு சமைக்க சொல்லி சாப்பிடுகின்றனர்.* பா.ஜ., வேட்பாளர்சில அரசியல் கட்சி தலைவர்கள் ஓய்வின்றி, தேர்தல் நடக்கும் தொகுதிகளில், கடந்த ஒரு வாரமாக பிரசாரம் செய்கின்றனர். பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., வேட்பாளர் பி.சி.மோகன், ஆந்திராவின் ராஜம்பேட் லோக்சபா தொகுதி பொறுப்பாளரமாக தொகுதியில் பிரசாரம் செய்தார்.தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் சென்று, லோக்சபா பிரசாரத்துடன், சட்டசபை தேர்தலுக்கும் சேர்த்து ஓட்டு சேகரித்தார். தர்மாவரம் சட்டசபை தொகுதியிலும் பிரசாரம் மேற்கொண்டார். இவர் தெலுங்கு மொழி பேச கூடியவர் என்பதால், கட்சி மேலிடம், அவரை பொறுப்பாளராக நியமித்து, வெற்றி வியூகம் வகுத்தது.இதுபோன்று, காங்., கட்சியை சேர்ந்த, துணை முதல்வர் சிவகுமார், ஆந்திராவின் மடகஷிரா சட்டசபை தொகுதியிலும்; கடப்பா லோக்சபா தொகுதியிலும் நேற்று முன்தினம் ரோடு ஷோ மற்றும் பிரசார பொது கூட்டங்களில் பங்கேற்று பேசினார். ஓரிரு நாளில், உத்தர பிரதேசத்துக்கும் சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக, அவரே நேற்று அறிவித்தார்.* அமைச்சர் ஜமீர்வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், பெங்களூரு சென்ட்ரல் காங்., வேட்பாளர் மன்சூர் அலிகான், ராஜ்யசபா எம்.பி., நாசிர் உசேன் ஆகியோர் தெலுங்கானாவின் ஹைதராபாத், வாரங்கல் உட்பட பல்வேறு தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.கர்நாடகாவை சேர்ந்த புதுச்சேரி பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, சில நாட்களாக மஹாராஷ்டிராவில் முகாமிட்டுள்ளார். கட்சியின் வெவ்வேறு பிரிவு பிரமுகர்ளுடன் ஆலோசனை நடத்தி, பிரசார யுத்திகளை சொல்லி கொடுக்கிறார்.அடுத்து மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசத்திலும் சில கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ளும்படி அந்தந்த கட்சி மேலிடம் அறிவுறுத்தி உள்ளன.* முணுமுணுப்புகடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கர்நாடக தலைவர்கள் பிரசாரம் செய்தனர். இரவில் 'ஏசி' அறையில் ஓய்வு எடுக்கின்றனர். மாநிலத்தில் தேர்தல் முடிந்தாலும், தங்களை விடாமல் மற்ற மாநில தேர்தல் பணியில், தலைமை ஈடுபட வைப்பதாக சிலர் முணுமுணுக்கின்றனர்.ஆனாலும், கட்சியின் வெற்றியே முக்கியம் என்று, மேலிட தலைவர்களின் பேச்சை தட்டாமல் பிரசாரம் செய்து, தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்கின்றனர்.நாடு முழுதும் அனைத்து தொகுதிகளின் ஓட்டுகளும், ஜூன் 4ம் தேதி தான் எண்ணப்படுகின்றன. அதுவரை தங்களுக்கு ஓய்வு கிடையாது என்று, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் தெரிந்து கொள்கின்றனர்.***