உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல் புகாரில் சித்தராமைய்யாவுக்கு நெருக்கடி

ஊழல் புகாரில் சித்தராமைய்யாவுக்கு நெருக்கடி

பெங்களூரு: மூடா' முறைகேடு தொடர்பாக, தன் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவை எதிர்த்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனுவை, உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனால், சித்தராமையாவுக்கு சிக்கல் உருவாகி, முதல்வர் பதவியில் அவர் நீடிப்பதும் கேள்விக்குறி ஆகி இருக்கிறது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மைசூரு நகரில் இருந்து, 40 கி.மீ., துாரத்தில் உள்ள கெசரே என்ற கிராமத்தில், 3.16 ஏக்கர் நிலத்தை முதல்வரின் மனைவி பார்வதிக்கு, அவரின் சகோதரர் வழங்கினார். இந்த நிலத்தை கையகப்படுத்திய, 'மூடா' என்ற மைசூரு மேம்பாட்டு ஆணையம், அதற்கு மாற்றாக மைசூரு நகரின் மையப்பகுதியான விஜயநகரில், 14 மனைகளை பார்வதிக்கு ஒதுக்கியது.பொதுவாக, வளர்ச்சியடைந்த பகுதிகளிலிருந்து கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஈடாக, வேறொரு வளர்ச்சியடைந்த இடத்தில், 40 சதவீத அளவுக்கு மட்டுமே நிலம் ஒதுக்க வேண்டும் என்பது, 'மூடா' அமைப்பின் விதி. ஆனால், தனக்கு 50 சதவீதம் வழங்க வேண்டும் என்று, முதல்வர் சித்தராமையாவின் மனைவி நெருக்கடி கொடுத்து, 14 மனைகள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

துஷ்பிரயோகம்

இதில், அதிகார துஷ்பிரயோகம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக, முதல்வர் சித்தராமையா மீது பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபிரஹாம், மைசூரு லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி கோரி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடமும் மனு அளித்தார்.இந்த புகார் மனு அடிப்படையில் விளக்கம் கேட்டு, முதல்வருக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், காலக்கெடுவுக்குள் முதல்வர் சித்தராமையா பதிலளிக்கவில்லை. மாறாக, நோட்டீசை திரும்ப பெறும்படி, கவர்னருக்கு ஆலோசனை கூறும் வகையில் அமைச்சரவை கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கிடையில், மைசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஸ்நேமயி கிருஷ்ணா, பிரதீப் குமார் ஆகியோரும், முதல்வர் மீது விசாரணை நடத்த கவர்னரிடம் அனுமதி கோரினர்.இந்நிலையில், முதல்வர் தரப்பில் கவர்னரின் நோட்டீசுக்கு பதில் அளிக்கப்பட்டது. அரசு தரப்பிலும், மாநில தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷ், கவர்னரிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.அனைத்தையும் பரிசீலனை செய்த கவர்னர், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு 17ஏ-ன் கீழ் முதல்வர் மீது விசாரணை நடத்த, ஆகஸ்ட் 17ம் தேதி அனுமதி அளித்தார். இதை ரத்து செய்ய கவர்னருக்கு உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா தரப்பில் ஆக., 19ம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

197 பக்க தீர்ப்பு

இம்மனு மீது, ஆக., 19 முதல் இம்மாதம் 12ம் தேதி வரை, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விவாதம் நடந்தது. முதல்வர் தரப்பில், உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ரவிவர்மா குமார், கவர்னர் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்கில், நீதிபதி நாக பிரசன்னா நேற்று மதியம், 12:00 மணிக்கு தீர்ப்பு வழங்கினார். கவர்னர் உத்தரவை எதிர்த்து முதல்வர் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்தார். தொடர்ந்து, 197 பக்கங்கள் கொண்ட தீர்ப்பையும் வெளியிட்டார். தீர்ப்பில் குறிப்பிட்டுஉள்ளதாவது:* கவர்னர் அனுமதி சரி* புகார்தாரர்கள் கவர்னரிடம் அனுமதி கோரியது சரி* தற்போதைய சூழ்நிலையில், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு 17 ஏ-ன் கீழ், கவர்னர் அனுமதி அளித்தது சரியே* சட்டப்பிரிவு 17 ஏ-ன் கீழ் தனிநபர்கள் விசாரணைக்கு அனுமதி கோருவதற்கு, போலீஸ் அதிகாரியை நாட வேண்டிய அவசியம் இல்லை* சாதாரண சந்தர்ப்பங்களில், அமைச்சரவை கூட்டத்தின் பரிந்துரைகளை கவர்னர் ஏற்கலாம். சில நேரங்களில் சொந்தமாகவும் கவர்னர் முடிவு எடுக்க முடியும். அத்தகைய சூழ்நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளது* கவர்னரின் நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை. அவர், தனக்குள்ள உரிமை வாயிலாக சுதந்திரமான முடிவை பயன்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்* எதற்காக உத்தரவிடப்படுகிறது என்பதை உத்தரவில் முழுமையாக குறிப்பிட வேண்டியதில்லை* சட்டப்பிரிவு 17ஏ- ன் கீழ் விசாரணை நடத்த அனுமதி வழங்குவதற்கு முன், குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை* கவர்னர் அவசரமாக முடிவு எடுத்துள்ளார் என்று கூற முடியாது; அவரது முடிவு சரியானதே* மனைகள் ஒதுக்கிய போது, மனுதாரர் பதவியில் இல்லை என்றாலும், மறைமுகமாக அதிகாரத்தை பயன்படுத்தி இருக்கலாம்* சட்டப்பிரிவு 17ஏ-ன் கீழ் மட்டுமே கவர்னர் அனுமதி அளித்துள்ளார்; கவர்னர் அனுமதி அளிக்க முடியாத வேறு பிரிவுகளில் அல்ல* விசாரணையில் தெரியவந்ததன்படி, இந்த முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், இந்த வழக்கில் மனுதாரரின் மனைவி பயனடைந்துள்ளார். வெளிநபர்கள் யாரும் இல்லை* இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது* மேலும், இதற்குமுன் பிறப்பித்த அனைத்து இடைக்கால உத்தரவுகளும் நீக்கப்படுகின்றன. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மூடா முறைகேடு தொடர்பாக முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்ய, லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிடக் கோரி, புகார்தாரர் ஸ்நேமயி கிருஷ்ணா, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.நீதிமன்றத்தின் தீர்ப்பு, மைசூரு பாதயாத்திரைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மரியாதையுடன் முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும். அவர் ராஜினாமா செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.விஜயேந்திரா கர்நாடக மாநில பா.ஜ., தலைவர்மூடா முறைகேட்டில் நடந்த விஷயங்கள் குறித்து, மைசூரு பாதயாத்திரையின் போது மக்களுக்கு விளக்கப்பட்டது. எனக்கும், அந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை ராஜினாமா செய்யும்படி நான் வலியுறுத்தவில்லை.- குமாரசாமி,மத்திய அமைச்சர், கனரக தொழில்கள் துறை

ராஜினாமா செய்ய மாட்டேன்!

* சித்தராமையா திட்டவட்டம்தீர்ப்பு வந்தபின், பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில், முதல்வர் சித்தராமையா அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுடன் அவசரமாக ஆலோசனை நடத்தினார். அத்துடன், மூத்த வக்கீல்களுடனும் ஆலோசித்தார். அப்போது, உயர் நீதிமன்றத்திலேயே இரு நீதிபதிகள் இடம்பெற்ற அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாமா என்பது குறித்து விவாதித்துள்ளார்.இதன்பின் அவர் கூறியதாவது:மக்களால் முழுபெரும்பான்மையுடன் அமைந்த காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கும், எனக்கு கருப்பு மை பூசுவதற்கும் பா.ஜ., - ம.ஜ.த., சூழ்ச்சி செய்கின்றன. அவர்களின் முயற்சி தோல்வியில் முடியும். நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே, ராஜினாமா செய்ய மாட்டேன். நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முழுமையாக படித்த பின், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எந்த விசாரணைக்கும் நான் அஞ்ச மாட்டேன்.கவர்னர், 17ஏ-ன் கீழ் மட்டுமே விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளார் என்றும், 218-ன் கீழ் அல்ல என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். பி.என்.எஸ்.எஸ்., - 218 வது பிரிவு, போலீசாரிடம் புகார் அளிக்கும் பிரிவு. அதன்படி நடக்கவில்லை. நாட்டில், தன் ஆட்சி இல்லாத மாநில அரசுகளை கவிழ்க்கும் பணியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.கர்நாடகாவில், 'ஆப்பரேஷன் தாமரை' முயற்சி தோல்வி அடைந்ததால், இப்படி எங்கள் மீது சதித்திட்டம் தீட்டியுள்ளனர். மேலும், 136 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள எங்களை, மக்கள் ஆதரவு இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று போராட்டம் நடத்தினர்.ஒரு வேளை சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டால், பதவியை பெறுவதற்கு மூத்த தலைவர்கள் வரிசையில் உள்ளனர். துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, எம்.பி.பாட்டீல், ஹெச்.கே.பாட்டீல், முனியப்பா இப்படி பலர் முதல்வர் பதவிக்கு ஏற்கனவே துண்டு போட்டு, முன்பதிவு செய்துள்ளனர்.இன்று நடக்கும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் இதுகுறித்தும் விவாதிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sethu
செப் 25, 2024 12:32

கள்ளத்தனம் செய்துள்ளதை ஒத்துக்கொண்டால் இவன் மனிதன் அப்படி ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அவன் திராவிடன் திருடன்


sethu
செப் 25, 2024 12:30

இதுதான் திமுகவின் விடியல் களவாணித்தனம் உலகம் முழுவதும் பரவியது சுடலைக்கு ரோகரா


Mohan
செப் 25, 2024 11:15

சித்து அங்கிள் நம்ம உச்ச நீதிமன்றம் இருக்க பயம் ஏன் ..எங்க பொன்முடி, மம்தா தீதியே பதவியில் நீடிக்கும் போது உங்களுக்கென்ன கவலை ., கபில் சிபல் இருக்காக, சிங்வி, பா சி அப்டி லேசுல விட்ருவாகலா


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 25, 2024 10:26

எங்கூரு கட்டுமரம் ஸ்டைலில் நான் தலித் என்பதால்தானே என்மேல கேசு போடுறீங்க ன்னு கேட்டுப் பார்க்கலாம் ...... மனைவிக்கு அல்சைமர் ன்னு அடிச்சு உடலாம் ....... ஏன், எனக்கே அல்சைமர் ன்னு தடாலடியா அடிக்கலாம் .....


sankar
செப் 25, 2024 10:16

ஏதாவது ஒன்று இருப்பவன் ராஜினாமா செய்வான் - நமக்கு அதெல்லாம் கிடையாதே


sankaranarayanan
செப் 25, 2024 09:18

உச்ச நீதி மன்ற தீர்ப்பு வந்த பின்பும் இவர் பதவி விழவில்லையென்றால் இவரை உச்ச நீதி மன்றமே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் அப்போதுதான் காங்கிரசு கட்சி அடக்கி வாசிக்கும்


N.Purushothaman
செப் 25, 2024 07:55

நான் ஏன் பதவி விலகனும்ன்னு கேக்குற மானங்கெட்ட முதல்வர கொடுத்த கட்சி தான் காங்கிரஸ் ....


subramanian
செப் 25, 2024 07:46

தமிழக மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் இப்படி ஒரு வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? தீர்ப்பு இப்படி சொல்ல முடியுமா? வழக்கு போட்டவன் உயிரோடு இருக்க முடியுமா?


subramanian
செப் 25, 2024 07:42

கிஜன், முதலில் உன்னை சிறையில் அடைக்க வேண்டும். ஊழலை மறைக்க, ஊழல் செய்ய நீ நேரடியாக உதவி செய்கிறாய்.


Kasimani Baskaran
செப் 25, 2024 05:42

பதவியில் இருக்கும் பொழுது எப்படி விசாரணையை சுமூகமாக செல்ல விடுவார்? ஆகவே பதவி நீக்கம் செய்து விசாரணையை துவக்கலாம்.


முக்கிய வீடியோ