மஹா கும்பமேளாவுக்கு சென்ற கர்நாடகாவின் நால்வர் பலி
மஹா கும்பமேளாவிற்கு சென்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நடந்து வருகிறது. கோடிக்கணக்கானோர் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர்.எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெலகாவியை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.இச்சம்பவம் மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இதிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அசம்பாவிதம் நடந்துள்ளது.நேற்று காலை, மத்திய பிரதேச மாநிலம், இந்துார் மாவட்டத்தில் உள்ள மன்பூர் அருகே டெம்போ டிராவல் ஒன்று சென்று கொண்டிருந்தது.இதில் மஹா கும்பமேளாவை பார்த்துவிட்டு 20க்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டு இருந்தனர்.இந்த டெம்போ, திடீரென முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. பின்னால் வந்த பைக்கும் லாரி மீது மோதியது. சம்பவ இடத்திலே ஆறு பேர் உயிரிழந்தனர். ஆறு பேரில் நான்கு பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்; மீதமுள்ள இரண்டு பேர் பைக்கில் வந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பசவனஹள்ளியை சேர்ந்த டிரைவர் சாகர் ஷாபுர்கர், சிவாஜிநகரை சேர்ந்த சங்கீதா மைத்ரி, வடகாவியை சேர்ந்த ஜோதி கண்டேகர், கிராந்தி நகரை சேர்ந்த நீதா பதம்ஜி என்பது தெரிய வந்தது.இதை கேள்விப்பட்ட எம்.பி., ஜெகதீஷ் ஷெட்டர், இந்துார் மாவட்ட கலெக்டர் முகமது ரோஷனிடம் தொடர்பு கொண்டு விசாரித்தார். பிரேத பரிசோதனைக்கு பின், உடல்கள் அனுப்பி வைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். - நமது நிருபர் -