உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்துக்கு வந்தோரில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நியமித்தது. இதற்கிடையே, வழக்கு தொடர்பான கரூர் போலீசாரின் விசாரணைக்கு தடைவிதித்த சென்னை உயர் நீதிமன்றம், வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது.

விசாரணை

அஸ்ரா கர்க்கும் கரூருக்குச் சென்று, உயிர் பலிக்கு காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்காத த.வெ.க., தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 'சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது தவறு; நடந்த சம்பவத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும்' என்று முறையிட்டனர்.உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 'இந்த விஷயத்தில், சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவும் முரண்பட்டு இருக்கின்றன.'இதில் நீதிமன்ற நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை' என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா ஆகியோர் கருத்து தெரிவித்து, வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை தள்ளி வைத்தனர்.

அதிரடி உத்தரவு

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (அக் 13) வெளியானது. சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

* விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.* இந்த குழுவில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !