UPDATED : மார் 22, 2024 05:36 PM | ADDED : மார் 22, 2024 03:40 PM
புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு குற்ற சதியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்கு வகிப்பதாக டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதிட்டது.மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நேற்று (மார்ச் 21) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரியது. இது தொடர்பாக விசாரணையில் அமலாக்கத்துறை சார்பில் வாதிட்டதாவது: மதுபான கொள்கை முறைகேட்டில் ரூ.100 கோடி ஈட்டப்பட்டதுடன், லஞ்சம் அளித்தவர்களிடம் இருந்து லாபத்தையும் கேட்டு பெற்றுள்ளனர். கோவா தேர்தலுக்கு ஹவாலா வழியாக நான்கு வழிகளில் பணம் சென்றுள்ளது. முறைகேடாக ஈட்டிய பணம் சென்னையில் இருந்து டில்லிக்கு வந்துள்ளது; பின்னர் கோவாவுக்கு சென்றுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு குற்ற சதியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்கு வகிக்கிறார். எல்லா நேரங்களிலும் அப்போதைய துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உடன் கெஜ்ரிவால் தொடர்பில் இருந்துள்ளார். தொலைபேசி உரையாடல்களின் ஆதாரங்கள் சிக்கி உள்ளன. இவ்வாறு அமலாக்கத்துறை வாதிட்டது.
நாட்டிற்காக...
நீதிமன்றத்திற்கு அமலாக்கத்துறையினர் அழைத்து வந்த போது நிருபர்களிடம் கெஜ்ரிவால் பேசுகையில், எனது வாழ்க்கையை நாட்டிற்காக அர்ப்பணித்து உள்ளேன். சிறையில் இருந்தாலும் நாட்டிற்காக பணியாற்றுவேன் என்றார்.