உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிஜிட்டல் நீதிமன்றத்துக்கு கேரளா ரூ.2.73 கோடி ஒதுக்கீடு

டிஜிட்டல் நீதிமன்றத்துக்கு கேரளா ரூ.2.73 கோடி ஒதுக்கீடு

கொச்சி : கேரள உயர் நீதிமன்றத்தில் மாதிரி, 'டிஜிட்டல்' நீதிமன்றத்தை அமைக்க மாநில அரசு, 2.73 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கொல்லத்தில், நாட்டின் முதல் டிஜிட்டல் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கடந்த ஆண்டு திறந்து வைத்தார். அப்போது கேரள உயர் நீதிமன்றத்தில் மாதிரி டிஜிட்டல் நீதிமன்ற அறையை அமைக்கும் திட்டம் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு கேரள அரசு ஒப்புதல் அளித்தது. இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கை: மாதிரி டிஜிட்டல் நீதிமன்ற அறை அமைக்க 2.73 கோடி ரூபாய் செலவாகும் என, 'சிட்கோ' எனப்படும், சிறு தொழில்கள் மேம்பாட்டு கழகம் மதிப்பீடு வழங்கியது. அதை ஏற்று, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை தகுதி வாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் வாயிலாக செயல்படுத்த வேண்டும். மாதிரி நீதிமன்றத்தில், அதிநவீன தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு, 'ஸ்மார்ட்' விளக்குகள், ஒலி - ஒளி வசதியுடன் பேசுவதற்கான திரைகள், மைக், ஸ்பீக்கர்கள் மற்றும் 'வீடியோ கான்பரன்ஸ்' வசதிகள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் நீதிமன்றத்தால் தொலைதுாரத்தில் உள்ளோர், மாற்றுத்திறனாளிகள் எளிதில் வழக்குகளில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் ஆஜராகலாம். டிஜிட்டல் ஆவண சேமிப்பு சுலபமாகும். அரசு மற்றும் பொதுமக்கள் செலவு குறையும் என, கேரள உயர் நீதிமன்றம் கருதுகிறது. இதை அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !